பத்துகேவ்ஸ், பிப்.15-தைப்பூசத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு 1 லிட்டர் பாலை 1 வெள்ளிக்கு வழங்கி சேவையாற்றியதை எண்ணி பெருமிதம் கொள்வதாக பெர்துபுவான் கெராக் செபாயான் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் புனித நிகழ்வின் மூலம் பால் குடம் எடுக்கும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 1,200 லிட்டர் தூய்மையான  பாலை எங்களின் பக்தி பால் திட்டத்தின் மூலம்  1 லிட்டர் பாலை 1 வெள்ளிக்கு  பெற்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தியது  தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சங்கத்தின் தலைவரும் மஇகாவின் தேசிய இளையோர் பேரவை உறுப்பினருமான விக்னேஷ்வரன் கூறினார்.

சங்கம் மேற்கொண்ட இந்த  முயற்சியின் வழி தைப்பூச விழாவில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும்  பக்தர்கள் தூய்மையான பசும் பாலைப்  பயன்படுத்தியதை எங்களால் உறுதி செய்யவும் முடிந்தது.

மேலும், இதன் மூலம் பிலாஸ்டிக் பால் புட்டிகளின் பயன்பாட்டையும் எங்களால் குறைக்கவும் முடிந்ததாக அவர் சொன்னார்.

இதனிடையே, இத்திட்டத்தின் வழி பக்தர்கள் தூய்மையான பாலைப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம், இந்த ஆன்மிக அனுபவத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு  உகந்த சூழ்நிலைகளை மாற்றும்  எங்களின்  நோக்கத்தை செயல்படுத்தவும் முடிந்தது  எனவும் அவர் விவரித்தார்.

இந்த நிகழ்வை வெற்றி பெறச் செய்த நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றி. உங்கள் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பே இந்த புனித முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க உதவுகிறது. எதிர்காலத்திலும் சமூகத்திற்கு சேவை செய்ய ஆவலாக இருக்கிறோம்.

உங்கள் நிலையான ஆதரவுக்கு நன்றி எனவும் விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.