Homeமலேசியாகல்விமாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி புரட்சி!  நாடு முழுவதும் இன்று...

மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி புரட்சி!  நாடு முழுவதும் இன்று ஆரம்பம்

பிரிக்ஃபீல்ட்ஸ் , பிப். 16-கட்டொழுங்கு, சமய நம்பிக்கை போன்ற உயர்நெறிகளோடு மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் வகுப்புகள் நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டன.

எதிர்மறை எண்ணங்கள், உயர் சிந்தனை திறன் போன்ற பண்புகளை மாணவர்களிடையே விதைத்து கடந்த 43 ஆண்டுகளில் 30,000திற்கு மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது ஸ்ரீ முருகன் நிலையம்.

அவ்வகையில் நாளை திங்கட்கிழமை புதிய பள்ளித் தவணை தொடங்கும் நிலையில் இன்று நாடளாவிய நிலையில் தனது வகுப்புகளை இனிதே தொடக்கியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா மற்றும் ஜொகூர் போன்ற மாநிலங்களில் தனது கல்வி புரட்சியைத் தொடக்கியுள்ளது ஸ்ரீ முருகன் நிலையம்.

“பிரிக்பீல்ட்ஸில் தெய்வீக ஆற்றல் கொண்ட ‘சங்கு’ முத்திரையோடு ஸ்ரீ முருகன் நிலையம் தனது வகுப்பைத் தொடங்கியது. மாணவர்கள், பெற்றோர்கள் என 1,000 திற்கு மேற்பட்டோர் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்நிலையத்தின் கல்வி புரட்சி இவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே இது காட்டுகிறது “என்று இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா குறிப்பிட்டார்.

இந்தியர்களின் முன்னேற்றம் ‘கல்வி’எனும் ஆயுதத்தின் கீழ்தான் உள்ளது. இதனை உணர்ந்த டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா 1982ஆம் ஆண்டில் ஸ்ரீ முருகன் நிலையத்தைத் தொடங்கினார்.

இந்த நிலையத்தின் வாயிலாக இன்று பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். இவர்களின் இன்றைய ஒளிமயமான வாழ்க்கைக்கு வித்திட்டவர் டான்ஸ்ரீ தம்பிராஜா என்று பிரிக்பீல்ட்ஸ், விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் கந்தையா மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் நிலைய வகுப்பின் தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கல்வி ஒன்றே இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு வறுமை கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு இலவச கல்வியை வழங்க இந்நிலையம் முன் வந்துள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

“ஸ்ரீ முருகன் நிலையத்தின் புதிய புரட்சியாக “ஜீரோ பி40 “திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். கல்வி ஒன்றே இவர்களின் குடும்பத்தை உருமாற்றும் “ என்றார்.

இதனிடையே, பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலைய தொடக்க நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் என 1,000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது இந்நிலையத்தின் மீது பெற்றோர்கள் கொண்ட நம்பிக்கையையே பறை சாற்றுகிறது என்று இந்நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் ராவ் விவரித்தார்.

அதே வேளையில், மாணவர்கள் மொழியியல், அறிவியல், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதற்கு இத்துறைகளில் ஸ்ரீ முருகன் நிலையம் கூடுதல் கவனம் செலுத்தும் என்றார்.

தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு துறையில் இவர்கள் தங்களின் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக  கூகள் மலேசியா நிறுவனத்துடன் ஸ்ரீ முருகன் நிலையம் பேச்சு நடத்தியிருக்கும் தகவலையும் ஸ்ரீ கணேஷ் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், கணக்கியல், கல்வி, அரசு சேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் முன்னாள் மாணவர்களை பேராசிரியர் நாதன் ‘அர்ஜூனா ‘விருது வழங்கி சிறப்பித்தார்.

 

spot_img

latest articles

explore more