கிள்ளான், பிப்.25-இங்குள்ள ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் இலக்கிய பாடங்களை பள்ளி அட்டவணைக்குப் பின்னர் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வகுப்புகள் பள்ளி அட்டவணைக்குப் பிறகு நடத்துவதற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக இவ்விவகாரத்திற்குத் தற்போது தீர்வு பிறந்துள்ளது.

பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியைத் தொடர்ந்து பள்ளிநிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் கல்வி துணை அமைச்சர் வோங் காஹ் ஹோவின் சிறப்பு அதிகாரி ஆகியோருடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் முழு கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் மாநிலக் கல்வி துறைஆகியவற்றுடன் கூடுதல் ஆலோசனை நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு நல்ல தீர்வு காணப்பட்டது என்று  டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் இலக்கிய வகுப்பு நேர மாற்ற விவகாரம் இப்போது சுமூகமாகத்தீர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வு மாணவர்களின் கல்வி தேவைகளை முன்னிலைப்படுத்தியுள்ளதையேக் காட்டுகிறது என்றார் அவர்.

“இந்த பிரச்சனையைத் தீர்க்க உதவிய கல்வி துணை அமைச்சர் வோங் காஹ் ஹோவிற்கு எங்களின் சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”.

“அதே வேளையில், இந்த தீர்வை செயல்படுத்த உதவிய ராஜா மஹாடி பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாகம், மாநில மற்றும் மாவட்ட கல்வித் துறையினர் ஆகிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார் குணராஜ்.