ஈப்போ, மார்ச் 2-பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த “ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு” திட்டம் லக்ன எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

“ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு” எனும் மாபெரும் திட்டம் தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்பு குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி தலைமையில் மிகச் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

அவ்வகையில் சுமார் 1,121 மாணவர்களுடன் 487 பெற்றோர்கள் மற்றும் 250 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கெடாவில் உள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு நேற்று வருகை மேற்கொண்டனர்.

” ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு” எனும் உன்னதமான சிந்தனை தோன்றிய கனமே மஇகா தேசிய உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்பு குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி தனது நிர்வாக குழுவின் ஆதரவுடன் கடந்த ஒரு மாத காலமாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் 1,121 மாணவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய சில திட்டங்களை இவர் வகுத்தார்.

இந்நிகழ்வு தொடர்பான விவரங்கள் ஊடகங்கள் மூலமாக பரப்புவதிலும்,பள்ளிகளைத் தொடர்புக் கொள்வதன் வழியும் ,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தல் மூலமாகவும் மேற்கொண்டார்.

இந்நிகழ்வு நேர்த்தியாகவும் சிறப்பான முறையில் நடந்தேற அனைத்து தொகுதி தலைவர்களும் ஏற்பாட்டு குழுவினருக்குத் தோள் கொடுத்தனர்.

இதன் வழி மாணவர்களும் பெற்றோர்களும் மஇகாவின் கல்விக்கூடமான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வித்துறைகள் பற்றி அறிந்து கொண்டனர்.

அதே சமயம், இந்தச் சுற்றுலா வழி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்திய சமுதாயத்திற்கு மஇகாவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ள சலுகைகளைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டனர்.

இம்மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழ் கல்வி ,அடிப்படைக் கல்வி,பட்டையக்கல்வி,இயங்கலை கல்வி போன்ற வாய்ப்புகள் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொண்டனர்.

தொழில்திறன் கல்வி தொடர்பான விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இதன் வழி மாணவர்கள் கைத்தொழில் வாழ்க்கையில் மேன்மை அடைய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதை  உணர்ந்தனர்.

தொடர்ந்து டான் ஸ்ரீ எம் இராமசாமி தமது உரையில் இந்திய மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தார்.

நமது இந்திய சமுதாயம் வாழ்வில் முன்னேற கல்வி ஒன்றே ஏணிப்படியாக இருப்பதை தமது உரையில் அவர் சுட்டிக் காட்டினார்.