வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐ-கார்டு

புத்ரா ஜெயா, ஜூலை 18 –

நாட்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கடப்பிதழுக்கு மாற்றாக ஐ-கார்டை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
தற்போது அவர்கள் அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பயன்படுத்துவதாகவும், அது சில சமயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், அதற்குப் பதிலாகப் புதிய பாணியிலான ஐ-கார்டு எனும் அடையாள அட்டையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிநுழைத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.

இது சம்பந்தமாகக் குடிநுழைவுத் துறையின் விதிமுறைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது விரைவில் அமலுக்கு வருமென்றும் அவர் குறிப்பிட்டார்.  ஐ-கார்டு என்பது அமலாக்கத்துறைகளிடம் காட்டப்படும் ஓர் அடையாள அட்டையென்றும் அது அனைத்துலகக் கடப்பிதழுக்கு மாற்றாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த ஐ-கார்டுகளில் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு நகல் எடுக்க முடியாத படியும் அதனைத் தவறாகப் பயன்படுத்த முடியாத வகையிலும் அதன் மின்னியல் சிப்ஸ் வடிவமைக்கப்படும் என்றும் முஸ்தாபார் குறிப்பிட்டார்.