Homeசமூகம்சமூகம்கோல குபு பாருவில் வெ. 17 லட்சம் செலவில் மின் சுடலை! - நிர்வாணா குழுமம்...

கோல குபு பாருவில் வெ. 17 லட்சம் செலவில் மின் சுடலை! – நிர்வாணா குழுமம் நிர்மாணிப்பு

ஷா ஆலம், ஏப். 10- உலு சிலாங்கூர் வாழ் இந்துக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு மின் சுடலையை அமைப்பதற்கு மாநில அரசு ஒப்புதழ் அளித்துள்ளது.

சுமார் 17 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மின்சுடலையை கோல குபு பாருவில் அமைப்பதற்கு நிர்வாணா குழுமம் இணைக்கம் தெரிவித்துள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் சைபுடின் ஷாபி முகமது தெரிவித்தார்.

இவர் இன்று  நிர்வாணா மலேசியா குழுமத்தின் துணைத் தலைவருடன் சந்திப்பு நடத்தினார்.

இச்சந்திப்பில் கோல குபு பாருவில் இந்துக்களுக்காக மின்சுடலை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

கோல குபு பாரு, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தின் விண்ணப்பத்தின் பேரில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் முழு ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இந்தப் பணிகளை உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் மேற்பார்வையிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார் .

“சிலாங்கூர் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் என்ற முறையில் நான் சொந்தமாகக் களமிறங்கி இப்பகுதியில் உள்ள இந்துக்களின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளேன்” என்றார் அவர்.

17 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான இந்த சமூகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிர்வாணா நிறுவனம் முன்வந்துள்ளதாக அவர் சொன்னார்.

இது வெறும் கட்டிடம் சம்பந்தப்பட்ட மேம்பாடு கிடையாது. மாறாக, அங்கீகாரத்தின் அடையாளமாகவும் எதிர்பார்ப்புகளுடன் இத்தனை நாட்கள் காத்திருந்த மக்களின் குரலுக்கு வழங்கப்பட்ட மரியாதையாகவும் விளங்குவதாக அவர் கூறினார்.

“இதுதான் எங்களின் அணுகுமுறை. வெறும் முழக்கமல்ல, வெறும் வார்த்தை ஜாலமல்ல, நாங்கள் பணிகளை முன்னிறுத்துகிறோம். செயல்களின் வழி நிரூபிக்கிறோம். மக்களின் ஆதரவைப் பெறுவது, உண்மையான பலன்களைத் தருவதன் மூலமே தவிர இனிப்பான வார்த்தைகளால் அல்ல என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.

மக்களுக்கான திட்டங்களை வெற்றியடையச் செய்வதில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு ஒற்றுமைக்கான பலமாக விளங்குவதை இங்கு காண முடிகிறது என்று அந்த அப்பதிவில் குறிப்பிட்டார்.

 

spot_img

latest articles

explore more