மகாதீர் மீது சட்ட நடவடிக்கை தேவை!

கோலாலம்பூர், ஜூலை 18-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரூம், முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக்கின் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டார்கள் என்ற உண்மை மகாதீரின் மகனான முக்ரிஸ் மூலமாக அம்பலமானது.

ஆகையால் அவ்விருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அரச மலேசிய போலீஸ் படைத் தலைவரிடம் பரிந்துரைப்பதாக மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 13-ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டத்தோ ஸ்ரீ ஜஹாபெர்டீன் முகமட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் தனது தந்தையும் முஹிடின் யாசினும் 2014-ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் நஜிப்பின் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிட்டார் என்ற செய்தி மறுநாள் ஜூலை 14-ஆம் திகதி ஸ்டார் ஆங்கில நாளேட்டில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாதீரின் மகனே அப்படிக் கூறியுள்ள பட்சத்தில் அரசாங்கத்தைக் கவிழ்க்க இவர்கள் சதி செய்தது தொடர்பாக இவ்விருவர் மீது சட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை அவசியமானது என டான் ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் புல்லுருவிகள் மீது தகுந்த நடவடிக்கை தேவை. இல்லையேல் சொந்த அரசியல் லாபத்திற்காக அவர்கள் மேலும் மேலும் பல குழப்பத்தை நாட்டில் ஏற்படுத்துவார்கள் என டான்ஸ்ரீடாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.