கோலாலம்பூர், ஜூன் 20-
SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதி தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், DNAA எனப்படும் விடுதலையின்றி விடுவிக்கப்படும் தீர்ப்பைப் பெற்றதில், அரசு வழக்கறிஞர் தரப்பை, பி.கே.ஆர். முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி சாடினார்.
டத்தோ ஸ்ரீ நஜீப் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக காத்திருந்ததால், DNAA பெறும் கோரிக்கையை முன்வைக்கும் அவரது உரிமையையும், அக்கோரிக்கையை ஏற்ற நீதிபதி K. முனியாண்டியின் முடிவையும் தாம் மதிப்பதாக, டத்தோ ஸ்ரீ ரஃபிஸி கூறினார்.
ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வழக்கைத் தொடங்குவதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க அரசு வழக்கறிஞர் தரப்பு ஏன் இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது என்பது தமக்குப் புரியவில்லை.
1MDB மற்றும் SRC ஊழல்களை முன்னர் ஆய்வு செய்து வெளிப்படுத்திய அனுபவத்தின் அடிப்படையில், SRC தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகளுக்கு பணப்புழக்கத்தின் தெளிவான ஆதாரங்கள் உள்ளதை டத்தோ ஸ்ரீ ரஃபிஸி சுட்டிக்காட்டினார்.


