சைபர்ஜெயா, ஜூன் 27-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறையில் இளங்கலைக் கல்வியைப் பயின்று வந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் 3 சந்தேகப்பேர்வழிகளைக் கைது செய்துள்ளது.
19 மற்றும் 20 வயதுடைய ஓர் ஆடவரும் இருவர் பெண்களும், ஜொகூர், ஜொகூர் பாரு, நெகிரி செம்பிலான், கெமிஞ்சே ஆகிய பகுதிகளில், நேற்று காலை மணி 9க்கும் இன்று அதிகாலை மணி 2க்கும் இடைப்பட்ட காலத்தில் கைது செய்யப்பட்டனர்.

20 வயது மாணவி கொலையுண்டது குறித்து புகார் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ள அம்மூவரும், உயிரிழந்த மாணவிக்கு நன்கு அறிமுகமானவர்களாவர்.
அம்மூவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க, இன்று காலையில் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அனுமதிக் கோரப்படுமென செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நொர்ஹிஷாம் பஹ்மான் தெரிவித்தார்.
முன்னதாக, உள்ளூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை, அவர் தங்கியிருந்த குடியிருப்பின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது கொலை என போலீஸ் பின்னர் உறுதிப்படுத்தியது.

தொடக்கக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட குடியிருப்பில் அத்துமீறி நுழைந்ததற்கான தடயங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில், தலையில் கனமான பொருளால் தாக்கப்பட்டதால் அம்மாணவி உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
இருப்பினும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கான எந்த தடயங்களும் இல்லை என போலீஸ் இதற்கு முன்பு கூறியிருந்தது.
படங்கள்: சினார் ஹரியான், பெர்னாமா


