செப்பாங், ஜூன் 27-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 3 சந்தேகபேர்வழிகளுகளை இன்று தொடங்கி 7 நாள் தடுப்புக்காவலில் வைக்க, செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதியளித்தது.
போலீஸின் விண்ணப்பத்தை ஏற்று, நீதிபதி அசாரோரானி அப்துல் ரஹ்மான், வரும் ஜூலை 3ஆம் தேதி வரையிலான தடுப்புக்காவல் உத்தரவை வழங்கினார்.
முன்னதாக, ஓர் ஆண் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று சந்தேக நபர்களும், கைவிலங்குகளுடன் போலீஸ் பாதுகாப்புடன் காலை 8.30 மணியளவில் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
பின்னர், காலை 9.45 மணியளவில் அம்மூவரும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே அழைத்துவரப்பட்டனர்.
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறையில் இளங்கலைக் கல்வியைப் பயின்று வந்த 20 வயது மாணவியின் கொலை தொடர்பில், போலீஸ் 19 மற்றும் 20 வயதுடைய ஓர் ஆடவரையும் இரு பெண்களையும், ஜொகூர், ஜொகூர் பாரு, நெகிரி செம்பிலான், கெமிஞ்சே ஆகிய பகுதிகளில், நேற்று காலை மணி 9க்கும் இன்று அதிகாலை மணி 2க்கும் இடைப்பட்ட காலத்தில் கைது செய்தது.
மாணவி கொலையுண்டது குறித்து புகார் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ள அம்மூவரும், உயிரிழந்த மாணவிக்கு நன்கு அறிமுகமானவர்களாவர் என செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நொர்ஹிஷாம் பஹ்மான் இதற்குமுன்னர் கூறியிருந்தார்.


