சென்னை, ஜூன் 27-
தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தும் விதமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கக்கூடிய அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன்.
உலக அளவில் திரைக்கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது என்பது மிக முக்கியமான விருதாக பார்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் விழா, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (Academy of Motion Picture Arts and Sciences) என்ற அமைப்பினால் நடத்தப்படுகிறது.
நடிப்பு, இயக்கம், திரைக்கதை என திரைப்படத்தின் பல்வேறு பிரிவுகளிலும் மிகச்சிறந்த ஆளுமையாக இந்திய அளவில் கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு தனது படங்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை ஹே ராம், இந்தியன், குருதிப்புனல் உட்பட கமல்ஹாசனின் ஏழு திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர் எதுவும் இறுதிக்கட்டத்திற்குத் தகுதி பெறவில்லை.
இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கக்கூடிய அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பில் உறுப்பினராக இணைவதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார் கமல்ஹாசன். அகாடமியிலிருந்து அழைப்பைப் பெறும் இரண்டாவது இந்திய நடிகர் கமல்ஹாசன்.
இதற்கு முன்பாக 2022ஆம் ஆண்டு நடிகர் சூர்யா அகாடமியின் அழைப்பை பெற்று உறுப்பினரானார்.