கோல குபுபாரு, ஜூலை 5-

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வேலை வாய்ப்பு கண்காட்சி வழி கடந்தாண்டு 1,200 பேர் பயனடைந்ததாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.

கடந்தாண்டு சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சி வழி இம்மாநிலம் முழுமையும் 1,000 திற்கு மேற்பட்டோர் பல துறைகளில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு வழி வகுத்ததாக அவர் சொன்னார்.

அதே வேளையில், இவ்வாண்டு கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோல லங்காட் ஆகிய மூன்று வட்டாரங்களில் இதுவரை நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சி வழி 400க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார் .

“இது உண்மையில் உற்சாகம் தருகிறது. இதன் வழி தனி நபர் மட்டுமல்லாது அவர்களின் குடும்பமும் மேம்பாடு காணும் “என்று இங்குள்ள மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சிக்கு சிறப்பு வருகை புரிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

23 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நேர்முக தேர்வு நடத்தப்பட்டது.

இதில் 70 பேர் வேலைக்குத் தேர்வு பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பாப்பாராய்டு விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பாடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், வேலை வாய்ப்பு வழங்கிய நிறுவனங்கள், சமுக அமைப்புகள் என அனைத்து தரப்பினருக்கும் பாப்பாராய்டு நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கோல குபுபாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சொக் தாவ் ,உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ந. சத்திய பிரகாஷ், சிலாங்கூர் மாநில சமூக நல இலாகா (சொக்சோ) இயக்குநர் முகமது ரஷிட் ஒத்மான், பிபிபி சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் உள்ளிட்ட பல அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர் பவித்ரா தலைமையிலான இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் சமூக நல பாதுகாப்பு திட்டம் (சொக்சோ), மைசெல், சமூக நல துறை, சுகாதார சேவை உள்ளிட்ட பல சேவைகளும் பொது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.