கோலாலம்பூர், ஜூலை 5-
இந்திய சமூகத்திற்கு உதவுவதற்கான முயற்சிகள் தொடர்பாக பி.கே.ஆர். துணைத்தலைவர் நூருல் இசா அன்வாரும் ம.இ.கா. துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனும் ஒருவரை ஒருவர் விரல் நீட்டி குற்றம் சாட்டக்கூடாது.
இவ்வளவு முக்கியமான ஒரு விவகாரம், பகிரங்கமாக விரல் நீட்டி குற்றம் சாட்டும் களமாக மாறக்கூடாது.
மாறாக, அவ்விருவரும் முதிர்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு – மித்ராவின் பணிப்படைத் தலைவர் பி.பிரபாகரன் வலியுறுத்தினார்.
கருத்து வேறுபாடுகள் நாகரிகமான முறையிலும் உண்மைகளின் அடிப்படையிலும் தீர்க்கப்பட வேண்டும். சமூகம் குழப்பத்தை ஏற்படுத்தும் வாக்குவாதங்களை பார்க்க விரும்பவில்லை. மாறாக உண்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எதிர்பார்ப்பதாக, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் கூறினார்.
இந்திய சமூகத்தின் பிரச்சனைகளைக் களைய, ஒரு வட்ட மேசை கலந்துரையாடலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்த அவர்,
அதில், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது கொள்கை வல்லுநர்கள், கல்வியாளர்கள், இந்திய சமூகத்தின் சமூக தலைவர்கள் முதலானோர் பங்கேற்க வேண்டும் என்றார்.
இந்த கலந்துரையாடலின் வழி, இந்திய சமூகத்தை குறிவைத்து தற்போது உள்ள முயற்சிகள் மற்றும் கொள்கைகளை பக்கச்சார்பின்றி மதிப்பீடு செய்ய முடியும். எந்தவொரு கூற்றுக்கும் ஆதரவாக ஆதாரங்கள் அல்லது தரவுகளை முன்வைக்க முடியும்.
மேலும், பயனுள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஒருமித்த தீர்வையும் எட்ட முடியும்.
வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பல தரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே, நாம் கருத்திணக்கம் கண்டு, இந்திய சமூகத்திற்கு பலனளிக்கும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என தாம் நம்புவதாகவும் பிரபாகரன் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தின் மேன்மைக்காக, தாம் அமைதியாக செயலாற்றி வருவதாக நிரல் இசா அண்மையில் கூறியிருந்த நிலையில், அதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டுக் காட்டும்படி டத்தோ ஸ்ரீ சரவணன் அவருக்கு சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


