கோலசிலாங்கூர், ஜூலை 6-

இந்நாட்டிலுள்ள இந்துக்களின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் செவிச்சாய்க்க வேண்டுமானால், இந்து சங்கம் பலம் பெற வேண்டும்.

அதற்கு, சங்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது அவசியமாவதாக என சிலாங்கூர் பேரவைத் தலைவர் மனோகரன் கிருஷ்ணன் இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்து சங்கம் ஏற்று நடத்துகின்ற திருமுறை விழாக்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் திரளாக கலந்துக்கொள்வது பெருமிதம் அளிக்கின்றது. ஆனால், அவர்கள் அனைவரும் இந்து சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதது வேதனையளிக்கின்றது.

இந்து சங்கம் உறுப்பினர் பலத்துடன் இருந்தால் மட்டுமே, நமது தேவைகளுக்கு உரிய கவனத்தை அரசாங்கம் வழங்கும் என மனோகரன் நினைவுறுத்தினார்.

மேலும், பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட, காணக் கிடைக்காத காட்சியாக, மலேசியாவில் திருமுறை விழா தொடர்ந்தாற்போல் விமரிசையாக நடத்தப்பட்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாக விளங்குவதாக இன்று மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 47ஆம் ஆண்டு திருமுறை விழாவில் உரையாற்றிய போது, கூறினார்.

இதனிடையே, விழாவில் பேசிய கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் தலைவர் பன்னீர் செல்வம் வேலு கூறுகையில், திருமுறை விழாவை ஏற்று நடத்துவதில் நிதி சிக்கல்கள் உள்ளதாகவும் பல கொடைநெஞ்சர்கள் வழங்கிவரும் நிதிகளால், அவ்விழாவை நடத்த முடிவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, கடந்த 13 ஆண்டுகளாக தமிழரசி முனியாண்டி என்பவர், எவ்வித பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், மாணவர்களின் பசியைப் போக்க, நிதியுதவியை அளித்து வருகின்றார். அவரை போலவே, பல நல்லுள்ளங்கள் அவர்களால் முடிந்த உதவிகளை வழங்கிவருவதை நினைவுக்கூர்ந்த பன்னீர் செல்வம், அரசியல் தலைவர்கள் அவர்களின் பங்களிப்பாக, வாக்குறுதியை அளித்தது போல், நிதியுதவியைத் தாமதமின்றி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

சிறையில் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் பேசிய பன்னீர் செல்வம், கடந்தாண்டு சிலாங்கூர் புஞ்சாக் அலாமிலுள்ள சீர்த்திருத்தப்பள்ளியில் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 26ஆக இருந்த வேளை, இவ்வாண்டு அவ்வெண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது வேதனைக்குரியது என்றார்.

அச்சூழலுக்கு பெற்றோர்களின் கண்காணிப்பு குறைவும் சமய போதனை இல்லாததுமே காரணங்களாக உள்ளன. சமயக்கல்வி உள்ளவர்கள் என்றென்றும் தவறான வழிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஆகையால், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இன்றைய திருமுறை விழாவில் பாலப்பள்ளி தொடங்கி இடைநிலைப்பள்ளி வரையில் திருமுறை ஓதுதல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோலசிலாங்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும், பெற்றோர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் முதலானோரும் திரளாக பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.