கோலாலம்பூர் , ஜூலை 9-
2016 நவம்பர் 24ஆம் தேதி இரவில் பெர்லிஸைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அம்ரி சே மாட் அடையாளம் தெரியாத சில நபர்களால் கடத்தப்பட்டு காணாமல் போனார்.
அவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா என்பது புரியாத நிலையில், அவர் காணாமல் போனதற்குப் போலீஸ் துறையும் அரசும் பொறுப்பேற்க வேண்டுமென அம்ரியின் மனைவி நொர்ஹயாத்தி அரிஃபின் அரசின் மீது சிவில் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவ்வழக்கின் விசாரணையில், விசாரணை அதிகாரியாகச் செயல்பட்ட அஸஹார் மூடா என்பவர், அம்ரி காணாமல் போன சம்பவமானது இயல்பான சம்பவம் என்றும் அவர் யாரால், எதற்காகக் கடத்தப்பட்டார் என்பதற்கான தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அந்த வழக்கின் மீது மேற்கொண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சமய விவகாரங்களில் அம்ரி ஈடுபட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத, போலீஸின் சிறப்புப் பிரிவு உட்பட, சிலர் அவரைத் திட்டமிட்டே கடத்திக் காணாமல் ஆக்கியதாக அப்போது வதந்தி உலவியது குறிப்பிடத்தக்கது.
-பொன் முனியாண்டி


