Homeசமூகம்ஜம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் விவகாரம்; அரசு நியாயமாக செயல்பட வேண்டும்! மலேசிய இந்து தர்ம...

ஜம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் விவகாரம்; அரசு நியாயமாக செயல்பட வேண்டும்! மலேசிய இந்து தர்ம மாமன்றம்

கோலாலம்பூர், ஜூலை 22-

சர்ச்சைக்குரிய சமய போதகர்கள் ஜம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என பிரதமர் துறையின் சட்டம் மற்றும் கழக சீர்திருத்தம் மீதான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளது குறித்து மலேசிய இந்து தர்ம மாமன்றம் ஆழ்ந்த ஏமாற்றத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, நம்பமுடியாததாகவும் உள்ளது என்று மாமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் அரசியல் சார்ந்தது அல்ல, மாறாக ஒழுக்கம், சட்டம் மற்றும் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டதாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரங்களில் மட்டும் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக, செல்வாக்கு மிக்கவர்களுக்கோ அல்லது மத சலுகைகள் உள்ளவர்களுக்கோ கேடயமாக மாறக்கூடாது என்றும் மாமன்றம் கூறியது.

அரசாங்கம் அரசியல் தைரியத்துடனும் சட்ட நேர்மையுடனும் செயல்பட வேண்டும். மலேசிய மக்கள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இனியும் அவர்கள் மௌனமாக இருக்க மாட்டார்கள். வெளிப்படையாக வெறுப்பை தூண்டுவோர் மீது அரசாங்கம் தொடர்ந்தாற்போல், நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதால், அரசாங்கம் உடனடியாக நியாயமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாமன்றம் அதன் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, ஜம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என சட்டத்துறை அலுவலகம் (A-GC) தெரிவித்திருந்ததாக, டத்தோ ஸ்ரீ அஸாலினா நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருந்தார்.

spot_img

latest articles

explore more