கோலாலம்பூர், ஆக. 4-
பொதுத் தேர்தலில் பல தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிப்பதில் இந்தியர்களின் வாக்குகள் பெரும் பங்காற்றுவதாக உரிமை கட்சியின் தலைவர்களில் ஒருவரான எம்.சதீஸ் கூறினார்.
நாட்டின் வாக்களிக்கும் சக்தியில் 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இந்தியர்களின் வாக்குகள் இருக்கும் பட்சத்தில், மடானி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜசெகவின் பல தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதால், அத்தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகளே அக்கட்சியின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியைக் கொண்டிருப்பதாக சதீஸ் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் அன்வார் தம்புன் தொகுதியில் வெறும் 3 விழுக்காட்டுப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆனால், அங்கு இந்திய வாக்காளர்களின் விழுக்காடு 12ஆக இருப்பதாகவும் ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக், சிரம்பான் தொகுதியில் 5,000 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும்போது அங்கு இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 14 விழுக்காடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட், இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால், பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியை இந்திய சமூகம் இழந்துள்ளதாகக் குறிப்பிட்டதை சதீஸ் மறுத்து, மேற்கண்ட புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார்.

