ஷா ஆலம், ஆக.6-

பழைய தோட்ட வீடுகளில் இன்னும் வசித்து வரும் தோட்டப் பாட்டாளிகள் மீது மறைமுகமாக நடத்தப்படும் அடக்குமுறை குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வருத்தம் தெரிவித்தார்.

பந்திங், சுங்கை சீடு தோட்டப் பாட்டாளிகளே இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.

இவர்களைத் தாம் நேரில் சந்தித்ததோடு இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக அவர் சொன்னார் .

தோட்ட நிர்வாகம் இத்தொழிலாளர்களுக்குக் கூட்டு மீட்டரை பொருத்தியுள்ள காரணத்தால் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு குடிநீர்க் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அதோடு, நீர்க் கட்டண பாக்கிக்கு பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்திற்கும் இவர்கள் ஆளாகியிருப்பதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான பாப்பாராய்டு சுட்டிக் காட்டினார்.

பி40 தரப்பினருக்காக மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச குடிநீர் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“இந்தச் செயல் அநீதியானது. மனிதாபிமானமற்றது. இதனால் தொழிலாளர்களுக்கு மேலும் சுமை ஏற்பட்டுள்ளது “என்றார் அவர்.

இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தோட்டத் தொழிலாளர்கள் மாநில அரசின் இலவச குடிநீர் திட்டத்தில் பங்கெடுக்கும் வகையில் வீடுகளுக்கு தனி மீட்டர்களைப் பொருத்துவதற்கான செலவைத் தானே ஏற்றுக் கொள்வதாக பாப்பாராய்டு சொன்னார் .