ஜொகூர் பாரு:
மாணவர்கள் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்க விரும்பினால், கல்வியுடன் தன்னாளுமை திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பள்ளியின் திறந்த மண்டபத்தில் நடைபெற்ற இவ்வாண்டு புறப்பாட விருது வழங்கும் விழாவில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் விளையாட்டு, சீருடை இயக்கம், கழகம் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்த சாதனையை நிகழ்த்தி பள்ளிக்குப் புகழை ஏற்படுத்திய மாணவச் செல்வங்களைப் பரிசளித்து சிறப்பித்தனர்.
செனட்டர் சிவராஜ் சந்திரன், மாணவர்கள் இன்றைய உலக மாற்றத்திற்கேற்ப அனைத்தையும் கற்றுத் தன்னை மேம்படுத்தி சாதனை படைக்க வேண்டும் என்பதில் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் புறப்பாட நடவடிக்கையில் நனிச்சிறந்த 26 மாணவர்களுக்கு அவரே விருதுகளை வழங்கினார்.
மேலும், இஷ்கண்டார் புத்திரி மாநகர் மன்ற உறுப்பினர் திரு. வெ. சங்கரபாண்டியன் மற்றும் பிற சிறப்பு பிரமுகர்கள் வருகைபுரிந்து, 87 மாணவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கினர்.
பள்ளியின் துணைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் மற்றும் செயலாளர்கள் அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சு. தமிழ்ச்செல்வி நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்தார்.


