கோலாலம்பூர், மார்ச் 11-

திரெட்ஸ் (Threads) மற்றும் பேஸ்புக் தளங்களில் நபர் ஒருவர் திருக்குர்ஆனை மிதிப்பது போன்ற அவமதிப்பான காணொளி பரப்பப்பட்டது தொடர்பாக மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தச் செயல் இஸ்லாமிய மதத்தைப் புண்படுத்துவதுடன், நாட்டில் நிலவும் பல்லின மற்றும் பல மத மக்களிடையேயான இணக்கத்தைச் சீர்குலைத்து, பதற்றத்தை உருவாக்கும் என்று MCMC தெரிவித்துள்ளது.

முதற்கட்ட ஆய்வின்படி, சம்பந்தப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ‘டிஸ்கி போர்னியோ’ (Dickie Borneo) என்ற பெயரில் இயங்கிய அந்தக் கணக்கைக் கண்டறிய முடியவில்லை என்றாலும், இது குறித்த தீவிர விசாரணை தொடர்வதாக ஆணையம் கூறியுள்ளது.

மேலும், அதே நபர் சமூக ஊடகக் குழு ஒன்றில் மத நிந்தனை சார்ந்த வேறு சில பதிவுகளையும் இட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகள் அனைத்தும் விசாரணைக்கான ஆதாரங்களாகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

“சம்பந்தப்பட்ட கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண சமூக ஊடக நிறுவனங்களுடன் MCMC இணைந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன், குற்றவாளி மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய அரச மலேசியப் போலிஸ் படை (PDRM) உடன் நெருக்கமான ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய பதிவுகளை மீண்டும் பகிர வேண்டாம் எனப் பொதுமக்களை MCMC கேட்டுக்கொண்டுள்ளது. மதம், இனம் மற்றும் அரச நிறுவனங்களை இழிவுபடுத்தும் அல்லது வெறுப்பைத் தூண்டும் எந்தவொரு உள்ளடக்கத்திற்கும் சமரசம் இன்றி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.