கோலாலம்பூர், அக்.12-

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களுக்கு நிதி வழங்குவதாக இந்திய சமூக உருமாற்றப் பிரிவு, மித்ராவுடன் கையெழுத்திட்ட விண்ணப்பம் குறித்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று 43 நிறுவனங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தங்கள் தரப்பு பலமுறை மித்ராவைத் தொடர்பு கொண்டதாகவும் தங்களுக்கு இதுவரை விண்ணப்பங்கள் குறித்து முறையான தகவல் கிடைக்கப்பெறவில்லை என்றும் விண்ணப்பதாரர்களில் ஒருவரான பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்தியச் சமூகத்தை உருமாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தற்போது நிலுவையில் இருப்பதால் தங்கள் நிறுவனங்களின் மீது பொது மக்கள் அவநம்பிக்கை கொண்டிருக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் நிறுவனங்கள் நிதி இழப்பையும் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திட்டங்கள் நிராகரிக்கப்பட்டா அதனை எழுத்துப்பூர்வமாக மித்ரா தரப்பிலிருந்து தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்திருந்த 43 நிறுவனங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மித்ராவுடன் ஒப்பந்தத்தில் (எஸ்எஸ்டி) கையெழுத்திட்டனர்.

எஸ்எஸ்டி கையெழுத்திட்ட பின் 2-4 வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் என்று விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அது தொடர்பாக மித்ரா அல்லது பிரதமர் துறையிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலோ அல்லது புதுப்பிப்போ கிடைக்கவில்லை என்று 43 நிறுவனங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.