அலோர் ஸ்டார், மார்ச் 11-

அம்னோ கட்சியின் ‘ரூமா பங்சா மலேசியா’ முன்மொழிவு, அக்கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கும் அரசியலில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் எடுக்கப்படும் ஒரு முயற்சி என்று கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி முகமது நோர் விமர்சித்துள்ளார்.

அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மலாய் கட்சிகளை மீண்டும் நெருங்குவதற்காக அம்னோ இந்த உத்தியைக் கையாளுவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் மீண்டும் ஒரு ‘பெரிய அண்ணனாக’ உருவெடுக்க அம்னோ முயல்வதாகத் தெரிவித்த சனுசி, இது குறித்த தனது கருத்துக்கள் தனிப்பட்டவை என்றும், இது தொடர்பாக கட்சி ரீதியாக இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

அம்னோ இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது மட்டும் மலாய் மக்களைத் தேடுவதாகவும், ஆனால் அதிகாரம் கிடைத்தவுடன் டி.ஏ.பி. மற்றும் பி.கே.ஆர். போன்ற கட்சிகளுடன் இணைந்து கொள்வதாகவும் அவர் சாடினார்.

அம்னோ பொதுப்பேரவையில் எடுக்கப்பட்ட இந்த முடிவைச் செயல்படுத்துவது அந்தப் கட்சியின் விருப்பம் என்று குறிப்பிட்ட அவர், மலாய் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அக்கட்சி உண்மையாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

இருப்பினும், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததைச் சுட்டிக்காட்டிய சனுசி, தற்போதைய அரசியல் சூழல் கணிக்க முடியாததாக உள்ளதாகத் தெரிவித்தார்.