கோலாலம்பூர், மார்ச் 12-
மலேசியாவிற்குச் சுற்றுலாப் பயணிகளாக சமூக வருகை பாஸ் (PLS) மூலம் நுழைந்துவிட்டு, இங்குள்ள உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டினரை மலேசிய குடிநுழைவுத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இது தொடர்பாகத் தகவல்களைப் பகிர்ந்த குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான், கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 9 வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 2,618 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தச் சோதனைகளின் மூலம் மொத்தம் 9,497 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1,158 பேர், 1963 ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் 39(b) விதியின் கீழ், தங்களது விசா நிபந்தனைகளை மீறியதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, தற்காலிக வேலை அனுமதி (PLKS) மற்றும் சமூக வருகை பாஸ் (PLS) ஆகியவற்றைப் பெற்றுவிட்டு, அந்தப் பாஸின் விதிகளுக்குப் புறம்பான வேலைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் விசா நிபந்தனைகளை மீறியவர்களில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் (532 பேர்) முதலிடத்தில் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தாய்லாந்து (248), இந்தோனேசியா (111), சீனா (86) மற்றும் பாகிஸ்தான் (51) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வருகை பாஸை (PLS) மட்டும் தவறாகப் பயன்படுத்திய 482 பேரில், தாய்லாந்து நாட்டவர் (235 பேர்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் முறையான அனுமதியின்றி வணிக வளாகங்களை நிர்வகிப்பதிலும் கையாளுவதிலும் ஈடுபட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினர் மீது எவ்வித சமரசமும் இன்றி கைது, சட்ட நடவடிக்கை மற்றும் நாடு கடத்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என டத்தோ ஜகாரியா எச்சரித்துள்ளார். மேலும், இது போன்ற சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.