புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ரேபிஸ் நோய்: பாதுகாப்பாக இருப்பீர்!
முதன்மைச் செய்திகள்

ரேபிஸ் நோய்: பாதுகாப்பாக இருப்பீர்!

புத்ராஜெயா, ஜூலை 19-
சமீபத்தில் நாட்டில் நாய்களால் பரவக்கூடிய ரேபிஸ் நோயானது சரவா சிரியான் வட்டாரத்தில் 5 குழந்தைகளுக்கு பரவியுள்ளது. இவர்களில் நால்வர் இந்நோயின் காரணமாக மரணமடைந்திருக்கும் வேளையில் இன்னுமொரு குழந்தைக்குக் கூச்சிங் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

அதேநேரத்தில் தைப்பிங் அருகாமையிலுள்ள குவால செபெத்தாங்கில் ஒரு நாய்க்கு இந்நோயின் வைரஸ் கண்டிருப்பதும் உறுதிப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில், வீட்டில் பிராணிகளை வளர்க்கக்கூடியவர்கள் அப்பிராணிகளின் செயலிலோ உடலிலோ எதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அருகாமையிலுள்ள பிராணிகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆலோசிக்கப்படுகின்றனர்.

மேலும், முடிந்தவரையில் பிராணிகளோடு வைத்திருக்கக்கூடிய தொடர்புகளைக் குறைத்துக் கொள்ளவும் ஆலோசிக்கப்படுகின்றனர். ஏனென்றால், ரேபிஸ் வைரஸ் தாக்கப்பட்ட பிராணிகளின் எச்சில் வழியாகவும் இந்நோய் மனிதர்களுக்குப் பரவக்கூடும். அவ்வாறு இயலாத பட்சத்தில் பிராணிகள் நலக் காப்பகத்தின் ஆலோசனையைப் பெற்று தடுப்பூசிகளின் அவசியத்தை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனைத்தவிர்த்து, எதிர்பாரா விதமாக நாய்க்கடி ஏற்பட்டிருக்குமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் தக்க ஆலோசனையைப் பெற்று உரிய சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்நோயினைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இன்னும் இல்லை. அவ்வகையில் இந்நோயின் தாக்கம் முழுமையாக இருப்பின் மரணம் ஏற்படும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

ஆக, பொதுமக்கள் இந்நோய் குறித்து கவனமாகச் செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன