கோலாலம்பூர்:
முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி செய்வதைவிட, மோசமான முஸ்லிம்கள் ஆட்சி செய்தாலும் அவர்கள் அவ்வளவு கொடூரமாக இருக்க மாட்டார்கள் என்று பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்த கருத்து, இன மற்றும் மத அடிப்படையிலான அரசியலைப் பிரதிபலிப்பதாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் நூர் மிஸ்வாரி ரம்லி தெரிவித்துள்ளார்.
இத்தகைய கருத்துகள் பல இன, மத மக்கள் வாழும் நாட்டில் சமூகங்களுக்கிடையே தவறான கண்ணோட்டத்தையும் வெறுப்புணர்வையும் உருவாக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருவரின் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் நீதி, அநீதி தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை ஹாடி அவாங் உணர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், உலக வரலாற்றில் மதம், இனம், வம்சம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எவராலும் கொடுங்கோன்மையை மேற்கொள்ள முடியும் என்றார்.
அதேபோல், நீதி, நேர்மை, நம்பகத்தன்மை, மனிதநேயம் ஆகியவை எந்தவொரு மதத்திற்கும் அல்லது சமூகத்திற்கும் மட்டும் சொந்தமானவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக் கட்சியான அமானா, அனைத்து மக்களுக்கும் அருளையும் நன்மையையும் வழங்கும் இஸ்லாத்தை உண்மையாக முன்னெடுக்கும் கட்சியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பன்முகச் சமூகத்தில் நீதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் முன்னுதாரணமாக பாஸ் திகழ வேண்டும் என்றார்.
பிற மதங்களைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தவோ, வெறுப்புணர்வைத் தூண்டவோ இஸ்லாம் போதிக்கவில்லை. மாறாக, வேறுபட்ட மத நம்பிக்கைகளைக் கொண்டவர்களிடமும் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தலைமைத்துவத்தை மத உணர்வுகளின் அடிப்படையில் மட்டும் மதிப்பிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தின் நிர்வாகச் சாதனைகள், பொருளாதார மேலாண்மை, ஊழல் ஒழிப்பு, மக்கள் நலன் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையிலேயே தலைவர்களை மக்கள் மதிப்பிட வேண்டும் என்றார்.
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத வேறுபாடுகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தாமல், கொள்கைகள், உண்மைகள் மற்றும் வேட்பாளர்களின் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு தலைவரின் உண்மையான மதிப்பு அவர் பின்பற்றும் மதத்தில் மட்டுமல்லாமல், அவர் நிலைநாட்டும் நீதியிலும், நிறைவேற்றும் பொறுப்புகளிலும், மக்களுக்கு வழங்கும் நலனிலும் அடங்கியுள்ளது என்று நூர் மிஸ்வாரி தெரிவித்தார்.


