கோலாலம்பூர்:
நாட்டின் உயர்மட்டப் பதவிகளை வகித்த ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும்போது, அதன் பாதிப்பு நீதிமன்றத்துடன் முடிந்துவிடுவதில்லை; மாறாக, அது ஒட்டுமொத்த நாட்டின் நற்பெயர், நம்பகத்தன்மை மற்றும் நிர்வாக நேர்மைக்கும் கலங்கம் ஏற்படுத்தும் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
ஊழல் என்பது வெறுமனே பணம் கையாடல் செய்வது மட்டுமல்ல. அது நாட்டின் சர்வதேச நம்பிக்கையையும் பாதிக்கும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் நற்பெயர் என்பது நம்பிக்கை, நேர்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.
உயர்மட்ட ஊழல் வழக்குகள், அந்நாட்டின் நிர்வாகத்தின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகப் பங்காளிகளின் நம்பிக்கையைக் குறைக்கக்கூடும் என்றார் அவர்.
அதேவேளை, பொதுமக்களின் நம்பிக்கைக்குப் பொறுப்பானவர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, அரசாங்க அமைப்புகள், அமலாக்கத் துறைகள் மற்றும் நீதித்துறையின் நேர்மை மீதும் மக்கள் சந்தேகம் கொள்ளத் தொடங்குவார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், ஒருவர் முன்பு அதிகாரமிக்க பதவியில் இருந்தார் என்பதற்காக ஊழல் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதோ கொண்டாடுவதோ ஆபத்தான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும். அரசியல் செல்வாக்கை விடப் பொறுப்புக்கூறலுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செல்வம், அரசியல் செல்வாக்கு, பதவி அல்லது தொடர்புகள் எதுவாக இருந்தாலும், எவரும் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. நீதித்துறை நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பொறுப்புக்கூறலை அமல்படுத்துவதும் ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழலின் விளைவுகள் இறுதியில் சாதாரண மக்களையே பாதிக்கின்றன. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டிய வளங்கள் மக்களின் தேவைகளிலிருந்து திசைதிருப்பப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், எதிர்காலத் தலைவர்கள் நாட்டின் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனில் முழுக் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அரசாங்க அமைப்புகளின் நம்பகத்தன்மையையும் சர்வதேச நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் அவர் கூறினார்.
தனிநபர்களைவிட நாடே உயர்ந்தது. அரசியல் விசுவாசம் ஒருபோதும் ஊழலை நியாயப்படுத்தும் காரணமாக இருக்கக்கூடாது. சட்ட நடைமுறைகளை மதிப்பது என்பது பொறுப்புக்கூறலைக் கைவிடுவதல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவைப் பொறுத்தவரை, தனிப்பட்ட நலன்களைவிடப் பொதுநலனுக்கும், அரசியல் பாதுகாப்பைவிடப் பொறுப்புக்கூறலுக்கும், தனிநபர்களின் அரசியல் நிலைப்பாட்டைவிட நாட்டின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் தலைமைத்துவமே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு தனிநபரைப் பாதுகாப்பதற்காக நாட்டின் நற்பெயர் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்திய அவர், இறுதியாக, தண்டனை பெற்ற அனைத்துக் குற்றவாளிகளுக்கும் வீட்டுக்காவல் வழங்கப்பட வேண்டுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.


