சிலாங்கூர் மாநில அரசின் அவசர மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ், பந்திங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெலுக் புனுட் பகுதியைச் சேர்ந்த தான் கியாட் ஹாவுக்கு இருதய சிகிச்சைக்காக RM50,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதிக் கடிதத்தை இன்று பந்திங் சட்டமன்ற மக்கள் சேவை மையத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு வீரமன் ஒப்படைத்தார்.
இந்த நிதியுதவியின் மூலம், தேசிய இருதயக் கழகமான IJN-இல், சிலாங்கூர் மாநில இதய சிகிச்சைத் திட்டத்தின் B பிரிவின் கீழ், ஒரு முறை அறுவை சிகிச்சை மற்றும் இரண்டு முறை தொடர் சிகிச்சைகளைப் பெற அவர் தகுதி பெற்றுள்ளார். இதற்கான மொத்தம் RM50,000 செலவையும் சிலாங்கூர் மாநில அரசு, செல்கேர் மேனேஜ்மென்ட் நிறுவனம் (SelCare Management Sdn. Bhd.) வாயிலாக ஏற்கவுள்ளது.
இந்த உதவி கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோருக்கு பாப்பாராயுடு வீரமண் நன்றி தெரிவித்தார்.
மருத்துவ அவசரநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களின் கோரிக்கைகளுக்கு மாநில அரசு உரிய கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் நலன் சார்ந்த ஒவ்வொரு கோரிக்கைக்கும் முக்கியத்துவம் அளித்து, தேவைப்படுவோருக்கு அரசாங்கத்தின் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வதே தமது முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த நிதியுதவி தான் கியாட் ஹாவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் மருத்துவச் செலவுச் சுமையைக் குறைப்பதுடன், அவரது சிகிச்சை தடையின்றித் தொடரவும் உதவும் என பாப்பாராயுடு வீரமன் நம்பிக்கை தெரிவித்தார்.


