கோலாலம்பூர், நவம்பர் 12:
கேடிஎம் கொமியூட்டர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், மைக்கோமியூட்டர்50 (MyKomuter50) பயண அட்டைக்கான பதிவை வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என கேடிஎம்பி (KTMB) அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டத்தின் மூலம், தகுதியுடைய பயணிகள் 50 ரிங்கிட் செலுத்தி 30 நாள்களுக்கு வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ள முடியும்.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை மலிவானதாக மாற்றும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலைக்குச் செல்வோர் மற்றும் கல்வி நிலையங்களுக்குத் தினசரி பயணம் மேற்கொள்வோருக்கு இது உதவியாக அமையும்.
உதாரணமாக, தஞ்சோங் மாலிம் – கேஎல் சென்ட்ரல் வழித்தடத்தில் 30 நாள்களுக்கான வழக்கமான பயணக் கட்டணம் 416 ரிங்கிட்டாக இருக்கும் நிலையில், மைக்கோமியூட்டர்50 அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் 50 ரிங்கிட் மட்டுமே செலுத்தி 366 ரிங்கிட் அல்லது 88 விழுக்காடு வரை சேமிக்க முடியும்.
அதேபோல், அலோர் ஸ்டார் – பட்டர்வொர்த் வழித்தடத்தில் வழக்கமான பயணக் கட்டணமான 284 ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், 234 ரிங்கிட் அல்லது 82 விழுக்காடு வரை சேமிக்கலாம்.
ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியக் குடிமக்கள் இப்பயண அட்டையைப் பெறத் தகுதியுடையவர்கள். இருப்பினும், மைரெயில்லைஃப் (MyRailLife) பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.
தகுதியை உறுதிப்படுத்த அடையாள அட்டை அல்லது சிறுவர்களுக்கான அடையாள அட்டை (மைகிட்) சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான பதிவை கேடிஎம் மொபைல் (KTM Mobile), கிட்ஸ் ஸ்டைல் (KITS Style) செயலிகள், கேடிஎம் கொமியூட்டர் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் அல்லது பயணச்சீட்டு கவுன்டர்கள் வழியாக மேற்கொள்ளலாம்.
செயலிகள் மூலம் அடையாள அட்டையின் நகலைப் பதிவேற்றம் செய்தால், தகுதி உறுதிப்படுத்த மூன்று வேலை நாள்கள் வரை ஆகலாம். அதேவேளையில், நிலையங்களில் உள்ள டிக்கெட் இயந்திரங்கள் அல்லது கவுன்டர்களில் அசல் அடையாள அட்டையைச் சமர்ப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
தகுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், கேடிஎம் மொபைல், கிட்ஸ் ஸ்டைல் செயலிகள் அல்லது கவுன்டர்கள் வழியாக கொமியூட்டர் லிங்க் அட்டையைப் பயன்படுத்தி மைக்கோமியூட்டர்50 பயண அட்டையை வாங்கலாம்.
வடக்கு வழித்தடத்தில் 10 நிலையங்கள், கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடத்தில் 20 நிலையங்கள், தெற்கு ஷட்டில் சேவையில் நான்கு நிலையங்கள் என மொத்தம் 34 நிலையங்களில் இப்பதிவு மற்றும் கொள்முதல் வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், பயணிகளின் வசதிக்காக 11 கூடுதல் பதிவு கவுன்டர்களையும் கேடிஎம்பி அமைத்துள்ளது.
பயண அட்டை வழங்கப்படும் வழித்தடங்கள்:
வடக்கு வழித்தடம்: பாடாங் பெசார் – பட்டர்வொர்த் மற்றும் பட்டர்வொர்த் – ஈப்போ.
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடம்: தஞ்சோங் மாலிம் – போர்ட் கிள்ளான் மற்றும் பத்து கேவ்ஸ் – பூலாவ் செபாங்/தம்பின்.
தெற்கு ஷட்டில் சேவை: பாலோ – ஜொகூர் பாரு சென்ட்ரல் மற்றும் கெம்பாஸ் பாரு – பாசிர் கூடாங்.
ஒவ்வொரு வழித்தடத்திற்குமான மைக்கோமியூட்டர்50 பயண அட்டையும் 50 ரிங்கிட் விலையில் விற்பனை செய்யப்படும்.
பயணிகள் தகுதிச் சரிபார்ப்பு, பதிவு மற்றும் பயண அட்டை வாங்குதல் ஆகிய நடைமுறைகளை ஒரே நாளில் முடித்துக்கொள்ளுமாறு கேடிஎம்பி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு www\.ktmb.com.my என்ற இணையத்தளத்தை நாடலாம் அல்லது 03-9779 1200 என்ற கேடிஎம்பி அழைப்பு மைய எண்ணில் தொடர்புகொள்ளலாம். கேடிஎம்பியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் அண்மைய தகவல்களைப் பெறலாம்.


