துன் மகாதீர் சரியல்ல! -தெங்கு அட்னான் சாடல்

0
2

கோலாலம்பூர், ஜூலை 20-

     “மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2.0” எனும் நேரடி விவாதத்தில் கலந்துக்கொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சவால் விட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சரியல்ல என கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் சாடினார்.

     பிபிபிஎம் கட்சி மற்றும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான அவருக்கு என்ன தேவை என்பது தமக்கு புரியவில்லை என தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமாகிய அவர் கூறினார்.

     போதும். பிரதமர் வழிநடத்தும் அரசாஙத்தை இன்னும் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும். டத்தோஸ்ரீ நஜீப் வழியில் இப்போது உள்ள அரசாங்கம் வழிநடத்தப்படுகிறது. இந்த நாட்டிற்கு பிரச்னையில்லை. இந்நாடு முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக நேற்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக்கொண்ட டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் குறிப்பிட்டார்.

     தங்கள் இருவர் மீதும் கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் அடுத்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிபிபிஎம் இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் “மறைப்பதற்கு ஒன்றுமில்லை 2.0” எனும் நேரடி விவாதத்தில் கலந்துக்கொள்ளும்படி டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு துன் டாக்டர் மகாதீர் அண்மையில் சவால் விட்டிருந்தார்.

     என் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளுக்கு பதிலளிப்பதற்கான நல்ல வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என நம்புகின்றேன். அதேபோல், நஜீப்பும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பாக இது அமையும் என அவர் கூறியிருந்தார்.

     இது குறித்து தெங்கு அட்னானிடம் வினவியபோது, தனது மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸுக்கு அம்னோவின் உதவித் தலைவர் பதவி கிடைக்காத அதிருப்தியின் காரணமாக துன் டாக்டர் மகாதீர் இவ்வாறு செய்வதாக பதிலளித்தார்.

     தொடர்ந்து, அம்னோ உறுப்பினர்களாக இருக்கும் பொதுச்சேவை ஊழியர்கள் அக்கட்சியின் உள்விவகாரங்களை வெளியிடக்கூடாது என்றும் மீறி வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் எச்சரிக்கை விடுத்தார்.