புத்ராஜெயா, ஜூலை 20-

ஆசிரியர்கள் விடுமுறையில் பயிற்சிக்குச் சென்றிருப்பதால் மாணவர்களும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்று அம்பாங்கில் உள்ள ஒரு பள்ளிக்கான உத்தரவை கல்வி அமைச்சு வெளியிடவில்லை என்று அமைச்சர், டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் தெரிவித்தார்.

இதில் சமூக வலைத் தளங்களில் வெளியான கடிதத்தின்படி தேர்தல் பணியாளர்கள் விளக்கமளிப்புக் கூட்டத்தில் ஆசிரியர்கள் சிலர் கலந்துக் கொண்டிருப்பதால் காலை மற்றும் பிற்பகல் வகுப்பில் பயிலும் 1,2ஆம் ஆண்டு மற்றும் புகுமுக வகுப்பு மாணவர்கள் 18,19ஆம் தேதிகளில் விடுமுறையில் செல்லலாம் என்று பள்ளி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பொதுவாக தேர்தல் ஆணையத்தின் விளக்கமளிப்புக் கூட்டத்தில் ஆசிரியர்கள், அமலாக்கத் தரப்பினர், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் அல்லது மாவட்டக் கல்வி அலுவலகம் கலந்து கொள்வது சாதாரணமான ஒன்று என்பதால் இதற்காக மாணவர்களை விடுமுறையில் செல்ல அனுமதிக்க வேண்டியதில்லை.

இதில் எப்படி இருப்பினும் விரிவான விசாரணையை அமைச்சு மேற்கொள்ளும். ஆனால் இதுபோன்ற உத்தரவை ஒரு போதும் வெளியிட முடியாது என அமைச்சின் நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் மாட்ஸிர் குறிப்பிட்டார்.

பொதுவாக இதுபோன்ற விவகாரத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகம் புகார் செய்து அந்த வகுப்புகளுக்கு வேறு ஆசிரியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மாணவர்களை 2 நாட்கள் விடுப்பில் செல்ல அனுமதித்தது முறையல்ல என்பதோடு இவ்வளவு காலம் கடைப்பிடித்து வந்த நெறியை மீறியுள்ளது என மாட்ஸிர் மேலும் கூறினார்.