கோலாலம்பூர், நவ.8-
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஜாக்கிர் நைய்கிற்கு வழங்கப்பட்ட நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹாமீடி தெரிவித்தார். ஜாக்கிர் சட்டத்தை மீறாத மற்றும் எந்தவொரு குற்றத்தையும் செய்யாத வரையில் அவரின் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை” என்று ஜாஹிட் ஹாமீடி குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று 2018 பட்ஜெட் தொடர்பான தனது அமைச்சின் உரையை முடித்து வைத்து பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். ஜாக்கிரின் இந்திய அனைத்துலக கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவரின் நிரந்தர குடியிருப்பு தகுதி மறுபரிசீலனை செய்யப்படுமா என்ற ஜசெக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமாரின் கேள்விக்கு ஜாஹிட் ஹமீடி இவ்வாறு பதிலளித்தார்.
ஜாக்கிருக்கு மலாய் மொழி பேசத் தெரியாதபோதிலும் அவருக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கியது ஏன் என்று ஜசெக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரின் கேள்விக்கு நிரந்தர குடியிருப்பு தகுதி பெற இந்த நிபந்தனை கிடையாது. குடியுரிமை கோருவதற்கு மட்டுமே ஒருவருக்கு மலாய் பேசத் தெரிந்திருப்பது நிபந்தனையாக்கப்படும் என்றார். இந்தியா கோரும் பரஸ்பர சட்ட உதவிகளை மலேசியா செய்யும் என்றும் துணைப் பிரதமருமான ஜாஹிட் ஹாமீடி விவரித்தார்.
நாட்டில் ஜாக்கிரின் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்று உறுதியளித்த துணைப்பிரதமர், எந்தவொரு தீவிரவாத நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் இவருக்கு எதிராக அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.


