அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சொக்சோ சந்தாதாரர்களுக்கான ஓய்வூதிய விகிதம் அதிகரிப்பு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சொக்சோ சந்தாதாரர்களுக்கான ஓய்வூதிய விகிதம் அதிகரிப்பு!

கோலாலம்பூர், நவ. 8-
வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி வேலை பேரிடர் பாதுகாப்பு மற்றும் உடல் செயலிழப்பு ஆகிய திட்டங்களின் கீழ் சொக்சோ சந்தாதாரர்களுக்கான ஓய்வூதிய விகிதம் 1.2 முதல் 10.4 விகிதம் வரையில் அதிகரிக்கப்படுகின்றது. இது குறித்து மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரிச்சர்ட் ரியோட் ஜேம் கூறுகையில், இந்த ஓய்வூதிய விகித அதிகரிப்பை தொடர்ந்து சுமார் 328,056 பேர் நிலுவையிலிருக்கும் கட்டணத்தை பெறுவார்கள் என தெரிவித்தார்.

நிரந்தர உடல் செயலிழப்பு, மற்றவர்களின் பராமரிப்பில் உள்ளவர்கள், உடல் செயலிழப்பு ஓய்வூதியம், இறந்தவர்களுக்கான ஓய்வூதியத்தை பெறுபவர்கள் முதலான பிரிவுகளிலுள்ள சொக்சோ சந்தாதாரர்களுக்காக சொக்சோ 7 கோடியே 26 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. 10ஆவது மதிப்பீட்டு ஆய்வின் அறிக்கைக்கு ஏற்ப அரசாங்கம் வேலை பேரிடர் பாதுகாப்பு மற்றும் உடல் செயலிழப்பு ஆகிய திட்டங்களின் கீழ் இந்த ஓய்வூதிய விகிதத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர்களின் செலவின சுமைகளை குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டிற்கு முன்பிலிருந்து ஓய்வூதியத்தை பெறுபவர்களுக்கு இந்த புதிய ஓய்வூதிய விகிதத்தின் கீழ் 10.4 விழுக்காடு அதிகரிக்கப்படும் என இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் இந்த ஓய்வூதிய விகித உயர்த்தப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டத்தோஸ்ரீ டாக்டர் ரிச்சர்ட் ரியோட் ஜேம் கூறினார். ஆகக் கடைசியாக 2010ஆம் ஆண்டு வரையில் ஓய்வூதியத்தை பெறுபவர்களுக்காக 2012ஆம் ஆண்டில் இந்த ஓய்வூதிய விகிதம் அதிகரிக்கப்பட்டது. 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான விகிதம் ஒருங்கிணைப்படும்.

ஆயினும், 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சந்தா தொகை அதிகரிக்கப்படவில்லை. தற்போது, சொக்சோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை 68 லட்சமாக அதிகரித்து விட்டதாக டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோ ஜேம் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் சொக்சோவின் வாரிய தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆசே சே மாட், தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் முஹம்மட் அஸ்மான் அசிஸ் முஹம்மட் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன