கோலாலம்பூர், நவ. 8-
அடுத்தாண்டில் வேலை வாய்ப்புச் சந்தை மிக மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தங்களின் பட்டப் படிப்பை முடிக்கவிருப்பவர்கள் வேலை வாய்ப்பைத் தேடுவதில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனத்தின் (எம்இஎப்) இயக்குநர் ஷம்சுடின் பர்டான் வலியுறுத்தினார்.
இதில் பட்டதாரிகளுக்கு நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி குறைந்த சம்பளத்தைக் கொடுப்பதால் அவற்றுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். எனினும் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களுக்கான தேவை தொடர்ந்து இருக்கும். பொதுவாக தொழில் காப்புறுதித் திட்டம், தனியார் துறை தொழிலாளர்களுக்கான 90 நாள் பிரசவ விடுமுறை ஆகியவற்றால் முதலாளிமார்கள் பாதிப்பிற்கு உள்ளாவதால் புதிய பதவிகளை அவர்கள் உருவாக்குவதை எதிர்பார்க்க முடியாது. இருந்த போதிலும் இவை அனைத்தும் புதிய பட்டதாரிகளுக்குத்தான் என்று கூறிவிட முடியாது.
இதில் அடுத்தாண்டு 60 வயது அடையும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தி அவர்களுக்கு பதிலாக 1 லட்சம் பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்படுவர். இவர்கள் அனைவரும் உண்மையில் கடந்த 2013லேயே பணி ஓய்வு பெற வேண்டியவர்கள், ஆனால் 5 ஆண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால் அவர்கள் அடுத்தாண்டில் பணி ஓய்வு பெறுவர்.
இதன் அடிப்படையில் தேசிய அளவில் ஏற்படும் பொருளாதார பாதிப்பினால் தங்கள் இலாபத்திற்கு ஏற்படக்கூடிய விளைவைக் கருத்தில் கொண்டு நிறைய தனியார் நிறுவனங்கள் குறுகிய கால அல்லது நிலை நிறுத்தப்பட்ட வேலை வாய்ப்புக் குத்தகைகளைத் தருவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஷம்சுடின் கூறினார்.


