கோலாலம்பூர், நவ. 9-
அண்மையில் மசீசவின் மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறிய ‘கெப்பாளா பாப்பாக் காவ் எனும் கருத்து இன்று நாடாளுமன்றத்தில் மனநல பிரச்னை மீதான கேள்வி பதில் அங்கத்தில் எழுப்பப்பட்டது. பி.கே.ஆரின் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூராய்டா கமாருடின், பிரதமர் கூறிய அக்கருத்து மனநல பிரச்னைக்கான குறியீட்டை காட்டுவதாக கூறினார்.
எனினும், தேசிய முன்னணியின் பாகான் செராய் உறுப்பினரான நூர் அஸ்மின் கசாலி திடிரென எழுந்து ஜூராய்டாவிடம் கேள்வியை முன்வைக்கும்படி கூறினார். அதன் பின்னர், ஜூராய்டா மனநல பிரச்னைக்கான சிகிச்சைகளுக்கு அரசாங்கம் எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது? என சுகாதார அமைச்சரான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் கேள்வியெழுப்பினார்.
மனநல சிகிச்சைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு போதிய நிதி போதவில்லை என்பதை தாம் அறிவதாகவும் மனநல ஆலோசகர்களை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் கெள்வியெழுப்பினார். தற்போது சராசரி ஒவ்வொரு 200,000 மக்களுக்கு ஒரு மனநல ஆலோசகர் மட்டுமே இருக்கும் நிலை இருக்கின்றது. 10,000 மக்களுக்கு ஒரு மனநல ஆலோசகர் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகின்ற நிலையில் நடப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 40 விழுக்காடு மலேசியர்கள் மன அழுத்தம், துன்புறுத்தல், தற்கொலை செய்ய எண்ணம் கொண்டிருத்தல் முதலான காரணங்களால் மனநல பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாக பி.கே.ஆரின் மகளிர் பிரிவு தலைவியுமான ஜூராய்டா கூறினார்.
ஜூராய்டாவின் கேள்விக்கு டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பதிலளிக்கையில், அழுத்தங்களுக்கான காரணங்களில் ஒன்றாக சுகாதாரம் சார்ந்த கேள்வி ஒன்று அரசியல் கேள்வியாக்கப்பட்டிருப்பதும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தான் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்பது கண்டிப்பாக தெரிய வேண்டுமென சொன்னார். பள்ளிகளில் மன அழுத்தங்களை குறைப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதோடு கிளினிக்குகள், மருத்துவமனைகள் மற்றும் இதர இடங்களில் அதற்கான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்க கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளிலுள்ள நிபுணர்கள் மக்களுக்கு மன அழுத்தங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கலாம் என டத்தோஸ்ரீ சுப்ரமணியம் குறிப்பிட்டார்.


