கோலாலம்பூர், நவ. 9-
2018ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு சந்தை இருண்டு போய் இருக்குமென கூறப்படும் ஆருடங்கள் ஒரு பழைய விவகாரம் என வேலை இல்லாமல் இருக்கும் பல பட்டதாரி மாணவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் ஃபிரி மலேசியா டுடே இணையத்தள பதிவேட்டிற்கு அளித்த செய்தியில், இப்போது நல்ல வேலையை தேடுவது மிக கடினமாக இருப்பதாகவும் மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷம்சுடின் பர்டான் மற்றும் பொருளாதார நிபுணர்களான பேராசிரியர் ஹூ கே பிங், டாக்டர் யே கிம் லெங் முதலானோர் கூறியிருக்கும் அடுத்தாண்டு வேலை வாய்ப்பு சந்தை கடினமானதாக இருக்கும் எனும் ஆருடங்களை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

நுர் ஃபாட்லினா (வயது 24) கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்னர் எனது உயர்கல்வியை முடித்த பிறகு வேலையை தேடி வருகிறேன். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்தவர்களே தேவை என கூறுகின்றனர். வேலை வாய்ப்பிற்கான போட்டிகள் கடுமையானதாக உள்ளது. புதிய பட்டதாரிகளை காட்டிலும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு அனுபவங்கள் ஏதும் இல்லை என்றால் எவ்வளவு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்? முதல்நிலை பட்டதாரி மாணவியான அவர், தன்னுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் தாம் மனமுடைந்து விட்டதாகவும் 6 நிறுவனங்களில் ஒன்று கூட தனது விண்ணப்பத்தை பரிசீலணை செய்யவில்லை என நுர் ஃபாட்லினா கூறினார்.

ஃபித்ரி சாலே (வயது 24) கூறுகையில், தாம் ஒரு ஆண்டுக்கு மேலாக வேலையை தேடி வருவதாகவும் இணையத்தளங்களில் தாம் வேலைகளுக்கு விண்ணப்பித்தும் இதுவரையில் எந்த பதில்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் சொன்னார். இதற்கு ஒருவேலை குறைவான பட்ஜெட் ஒரு காரணமாக இருக்கலாம். பெட்ரோலிய பொறியியல் துறை பட்டதாரி மாணவரான அவர், வேலை வாய்ப்பினை பெறுவதற்கு தனது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க நிறுவனங்கள் கூடுதல் செலவுகளை செய்ய வேண்டியிருப்பதாக ஃபித்ரி குறிப்பிட்டார். குறிப்பிட்ட வேலை இலக்கை அடைவதற்கு அதிக காலம் பிடிக்கும். இதன் காரணமாக அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களை எதிர்பார்க்கின்றனர். இதுவரை எத்தனை நேர்காணலுக்கு சென்றேன் என தெரியவில்லை. என்னுடைய படிப்பிற்கு ஏற்ற துறையாக இல்லாவிட்டாலும் பல வேலைகளுக்கான பாரங்களை பூர்த்தி செய்ய தயாராக உள்ளேன் என ஃபித்ரி சொன்னார்.

மற்றொரு பட்டதாரி மாணவரான ஃபாரிஸ், நிரந்தர வேலை கிடைக்கும் வரையில் கிரேப் கார் ஓட்டுநராக வேலை செய்து வருவதாக கூறினார். மெகாட் அப்துல் மாலிக் ஜோஹா கூறுகையில், இதற்கு முன்னர் பல வேலைகளுக்கு விண்ணப்பித்து கிடைக்காத நிலையில் தற்போது விளம்பர எழுத்தாளர் வேலை கிடைத்திருப்பதாக கூறினார். பல நிறுவனங்கள் என்னுடைய விண்ணப்பித்திற்கு பதில் கொடுக்கவில்லை. நேர்க்காணல் செய்த சில நிறுவனங்கள் எனக்கு அனுபவம் இருக்கிறதா? என கேட்டன. இணையத்தளத்தில் வேலையை தேடி விண்ணப்பித்து நேர்க்காணலுக்கு செல்வது எளிது அல்ல. புதிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக மெகாட் குறிப்பிட்டார்.