பெல்பாஸ்ட், நவ.10 –
2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான பிலே ஆப் சுற்றில் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கோலில் வட அயர்லாந்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஒரே கோலை 58 ஆவது நிமிடத்தில் ரிக்கார்டோ ரோட்ரிகுவேஸ் பினால்டியின் மூலம் போட்டார்.

ருமேனியாவைச் சேர்ந்த நடுவர் ஒவிடியூ ஹாட்டேகன் வழங்கிய சர்ச்சைக்குரிய பினால்டியின் வழி சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் ஷெர்டான் ஷக்கிரி அடித்த பந்து வட அயர்லாந்து ஆட்டக்காரர் கோரி ஈவான்சின் முதுகில் பட்டிருந்தாலும் நடுவர் பந்து அவரின் கையில் பட்டதாக நினைத்து கொண்டு பினால்டியை வழங்கினார்.
நடுவரின் சர்ச்சைக்குரிய இந்த முடிவு வட அயர்லாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை பேசல் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் மீண்டும் இவ்விரண்டு நாடுகளும் சந்திக்க விருக்கின்றன.

இதனிடையே நடுவரின் முடிவு குறித்து வட அயர்லாந்து பயிற்றுனர் மைக்கல் ஓ நில் அதிருப்தி தெரிவித்துள்ளார். கோரி ஈவான்ஸ் மீது பந்து பட்டதை நடுவர் சரியான நிலையில் இருந்து கவனிக்க தவறி விட்டதாக ஓ நில் குற்றஞ்சாட்டியுள்ளார்.


