14ஆவது பொதுத்தேர்தல்: புத்ராஜெயா அல்லது லங்காவியில் துன் மகாதீர் போட்டியா?

0
23

கோலாலம்பூர், நவ. 16-
நாட்டின் 14ஆவதுப் பொதுத்தேர்தலில் துன் டாக்டர் மகாதீர் முகமட் புத்ராஜெயா அல்லது லங்காவியில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரிபூமி பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் ஆருடம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட தொகுதிகளில் முன்னாள் பிரதமரான துன் மகாதீர் போட்டியிட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியதாக டெ ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தன்னை வேட்பாளராக்க துன் மகாதீர் முன்வருவார் என கருதுகிறேன். காரணம், அவர்தான் எங்களின் போராட்டத்திற்கு வித்திட்டவர். பல ஆருடங்கள் கூறப்படுவது போல் அவர் புத்ராஜெயாவில் போட்டியிடுவதற்கு கோரிக்கைகள் வலுத்து வந்தாலும் அவர் லங்காவியில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் தாம் புத்ராஜெயாவில் போட்டியிடவிருப்பதாக கூறப்படுவதை தாம் மறுக்கவில்லை என துன் மகாதீர் கூறியிருந்தார்.

கடந்தாண்டு கிளந்தான் மாநில அமானா கட்சியின் தலைவர் டத்தோ ஹூசாம் மூசா, புத்ராஜெயாவை உருவாக்கிய துன் மகாதீர் அந்த தொகுதிலேயே போட்டியிட வேண்டுமென வலியுறுத்தினார். இதனிடையே, கோத்தாபாருவில் அப்துல் ரஷிட் தீவிரமாக இயங்கி வருகின்ற நிலையில் வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடுவேனா இல்லையா என்பது குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை என டெ ஸ்டார் நாளேடு குறிப்பிட்டுள்ளது. கோத்தாபாரு பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவராக ரஷிட் இருந்து வருகிறார்.

வரும் பொதுத்தேர்தலில் அக்கட்சி சுமார் 38 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அவையனைத்தும் அம்னோவிற்கு எதிரான தொகுதிகளாக இருக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த பொதுத்தேர்தலில் ஜ.செ.க. வெற்றி பெற்ற தொகுதிகளை காட்டிலும் இது அதிகம். இருப்பினும், எங்களுக்கு வேறு வழிகளில்லை. காரணம், மலாய்காரர்களின் ஆதரவு அடிப்படையில் நம்பிக்கை கூட்டணியில் நாங்கள்தான் முதன்மை கட்சியாக இருக்கின்றோம்.

அதோடு, எதிர்கட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு இக்கட்சியைத்தான் நாங்கள் தலைவராக கருதுகிறோம். 14ஆவது பொதுத்தேர்தலில் கெடா, ஜொகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் நம்பிக்கை கூட்டணியை பிரிபூமி பெர்சத்து கட்சிதான் வழிநடத்தும். காரணம், துன் மகாதீரின் சொந்த மாநிலமான கெடாவிலும் அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் சொந்த மாநிலமான ஜோகூரிலும் அக்கட்சிக்கு மிக பெரிய பலம் உள்ளதாக ரஷிட் குறிப்பிட்டார்.