கோலாலம்பூர், நவ.16-
மக்களுக்காக அமல்படுத்தப்பட்ட சூரிய வெளிச்சத்தினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் (சோலார்) அத்துறையில் அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குவதாக எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர் துறை துணையமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.
மேலும், வணிகமில்லா அமைப்புகள் சோலார் மின்சக்தி சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை பெறுவதை இது உறுதி செய்வதாக அவர் கூறினார். நிர்ணயிக்கப்பட்ட இயங்குமுறையின் கீழ் இத்துறையில் வணிக நிறுவனங்களின் போட்டித்தன்மை இல்லாமல் அந்த வணிகமில்லா அமைப்புகளுக்கு இந்த திட்டம் வாய்ப்புகளை வழங்குகின்றது.
மேலும், மக்கள் அரசாங்கத்தின் நிதியை சார்ந்திருப்பதை இது குறைப்பதோடு இயற்கை எரிவாயுவினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலையும் கல்வியையும் இது வழங்குகின்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் புதிய தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்குவதாக டத்தோஸ்ரீ தேவமணி கூறினார். முன்னராக நாடு முழுவதிலும் செயல்பட்டுவரும் சூரிய வெளிச்சத்தினால் மின்சாரத்தை உருவாக்கும் திட்டம் குறித்தும் அதனால் சமூகம் அடைந்த நன்மைகள் குறித்து உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சே ரோஸ்லி பின் சே மாட் கேள்வியெழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோஸ்ரீ தேவமணி மேற்கண்டவாறு சொன்னார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் சமூக சோலார் திட்டத்திற்கு அரசாங்கம் 10.51 எம்.வி வரையில் அனுமதி வழங்கியுள்ளது. இதில் 4.96 எம்.வி. வருமானத்தை ஈட்டி தர தொடங்கியிருப்பதோடு பயன்பாட்டு தரப்பிற்கு மின்சாரத்தை விற்பனை செய்துள்ளதாக டத்தோஸ்ரீ தேவமணி குறிப்பிட்டார்.


