கோலாலம்பூர், நவ.16-
வரும் 2050இல் இந்தியர்கள் சமூகம், பொருளாதாரம், கல்வி என அனைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக ‘நெகாராகூ கண்காட்சி திகழும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.
நாட்டின் மேம்பாட்டு திட்டத்தின் வெற்றிச் சின்னமாகத் திகழும் நெகாராகூ கண்காட்சி நாட்டின் பல்வேறு பரிமாண வளர்ச்சி திட்டங் களை மக்களுக்கு எடுத்துரைக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கினால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட இக்கண்காட்சி குறித்து கருத்துரைக்கையில் குறிப்பிட்டார்.
மிகப்பெரிய கண்காட்சியான நெகாராகூ கண்காட்சி தலைநகர், டத்தாரான் மெர்டேக்காவில் இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெறும். ஒரு காலத்தில் நாடு எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது, எதிர்காலமான 2050 இல் எப்படி இருக்கப் போகிறது என்பதை இலக்கவியல் இணையம் வழி பொது மக்கள் காணலாம் என்று துணையமைச்சர் குறிப்பிட்டார்.
கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு அடைந்த வளர்ச்சி குறித்து மக்கள் குறிப்பாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். விரையில் பள்ளி விடுமுறை தொடங்கப்படுவதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு இக்கண்காட்சிக்கு வருகை புரிந்து பயனடையும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் சிந்தனையில் உருவான நெகாராகூ கண்காட்சி திட்டத்தின் வழி நாடு மற்றும் அதன் மக்களின் மேம்பாட்டில் அரசு வகுத்துள்ள ஆக்கப்பூர்வ திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் மஇகா தேசிய துணைத் தலைவருமான தேவமணி கூறினார்


