டர்பன், நவ.17:
தென் ஆபிரிக்கா, டர்பன் நகரில் நான்காவது உலகத் தமிழர் மாநாடு நேற்று முன்தினம் 15.11.2017 புதன்கிழமை காலை ஆரம்பமானது. சூலு நாட்டின் அரசர் சுவேலித்தினி காபெக்குசூலு தலைமையேற்று குத்துவிளக்கேற்றி மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மாநாட்டின் பிரதான மேடையில் மலேசியாவைப் பிரதிநிதித்து மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் , மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனத்தின் (மைக்கி) தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
மலேசியாவிலிருந்து மைக்கியின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் தலைமையில் 21 பேராளர்கள், தேசிய நில நிதிக் கூட்டுறவுக் கழகத்தின் இயக்குனர் டத்தோ சகாதேவன் தலைமையில் 4 பேராளர்கள் உட்பட இந்தியா, மொரிசியஸ், சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து இதன் மூலம் பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 2009ஆம் ஆண்டு இந்த மாநாடு முதல் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு துபாயிலும் 2016ஆம் ஆண்டு சென்னையிலும் நடந்தது. இந்த ஆண்டு டர்பனில் நடக்கவிருக்கிறது.
தமிழர்கள் பல நாடுகளில் வசிக்கும் போது இந்த மாநாடு டர்பனில் ஏன் நடக்க வேண்டும் என்னும் கேள்வி எழுவது இயல்பானதே. ஆனால் டர்பனில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கிறார்கள். இதன் காரணமாகவே இங்கு இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக வெளிநாடுகளில் தமிழர்கள் இருக்கும் நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக இருக்கும். ஆனால் இந்த மாநாடு தொழில், முதலீடு, வாய்ப்புகள் குறித்து விவாதிக்க இருக்கிறது என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் விஆர்எஸ் சம்பத் விளக்கமளித்தார்.
கயானா பிரதமர், மொரீஷியஸ் துணை அதிபர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தவிர, உலகம் முழுவதும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் இங்கு ஒரே கூரையில் இணைந்துள்ளனர். தமிழர் மாநாடாக இருந்தாலும், தமிழர் அல்லாத முக்கிய பிரமுகர்கள் பலரையும் இந்த மாநாட்டுக்கு அழைத்திருக்கிறோம். இந்திய மத்திய அமைச்சர்கள் சிலரும், மாநில அரசின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அடுத்த ஆண்டு புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். ஒரு வருடம் வெளிநாட்டிலும் மறு ஆண்டு உள்நாட்டிலும் நடத்த முடிவெடுத்திருக்கிறோம். தமிழர்கள் பணி செய்வதில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தொழிலில் மற்ற பிராந்திய மக்களுடன் ஒப்பிடும்போது சற்று பின் தங்கி இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றுவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என சம்பத் தெரிவித்தார்.


