மெட்ரிட், நவ.17-
ஸ்பெயினில் மெட்ரிட் டார்பி ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும்.கடந்த சில ஆண்டுகளாக மெட்ரிட் டார்பி ஆட்டத்தில் வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த ரியல் மெட்ரிட் ஒரு நிச்சயமற்ற சூழலில் அத்லேட்டிக்கோ மெட்ரிட்டுக்கு எதிராக களமிறங்கவுள்ளது.
அத்லேட்டிக்கோ மெட்ரிட்டின் புதிய அரங்கமான வான்டா மெட்ரோபொலிடானோ அரங்கில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. ஸ்பெயின் லா லீகா போட்டியில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவைக் காட்டிலும் எட்டு புள்ளிகளில் ரியல் மெட்ரிட் மூன்றாவது இடத்தில் பின் தங்கியுள்ளது. ரியல் மெட்ரிட்டுக்கு பின்னால் அத்லேட்டிக்கோ மெட்ரிட் நான்காவது இடத்தில் உள்ளது.
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் கிட்டத் தட்ட குழுப் பிரிவிலேயே வெளியேறும் ஒரு நிலையில் அத்லேட்டிக்கோ உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு கிளப்புகளுக்கு இடையிலான ஆட்டம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த சில ஆட்டங்களில் உலகின் சிறந்த ஆட்டக்காரரான கிறிஸ்டியோ ரொனால்டோ, ரியல் மெட்ரிட்டுக்கு கோல் போடுவதில் திணறி வருகிறார். அத்லேட்டிக்கோ மெட்ரிட்டைப் பொறுத்த வரையில் அதன் முன்னணி நட்சத்திரம் அந்தோய்ன் கிரியேஸ்மேனும் சொதப்புகிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


