கோலாலம்பூர், நவ, 17-
மலேசியாவின் தமிழ்க்கல்வியின் அகவை 200ஆம் ஆண்டை தொட்டுவிட்ட நிலையிலும், இன்னமும் அடிப்படை வசதியின்றி, பல தமிழ்ப்பள்ளிகள் இருப்பது மனவருத்தத்தை தருகின்றது. இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பள்ளியைக் காக்க வேண்டியது நமது கடமை. தமிழ்க்கல்வியை மீட்பது நமது உரிமை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டுமென தியாகு கேட்டுக் கொண்டார்.
இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் தமிழ்ப்பள்ளியைக் காப்போம்! தமிழ்க்கல்வியை மீட்போம்! என்ற முழக்கத்தோடு, ஜோகூரிலிருந்து புத்ராஜெயாவரையில் நெடுந்தூர நடைப்பயணத்தை தியாகு மேற்கொள்ள விருக்கின்றார்.
மருந்தியல் துறையின் பட்டதாரியான இவர், இந்த நெடுந்தூர நடைபயணம் மக்களுக்கு பல்வேறான விழிபுணர்வுகளை வழங்குமென நம்பிக்கை தெரிவித்தார். இந்த நடைப்பயணத்தின் போது, 17 இடங்களில் இதற்கான கலந்துரையாடலும் விளக்கக்கூட்டமும் நடைபெறுமென அவர் தெரிவித்தார்.
மே 19 இயக்கமும் அதனை சார்ந்த இயக்கங்களின் ஆதரவோடும் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயணம் ஏறத்தாழ 350 கிலோ மீட்டர் தொலைவை கொண்டதாகும். இந்த நடைப்பயணம் நவம்பர் 25ஆம் தேதி ஜோகூர்பாருவிலிருந்து புத்ராஜெயா நோக்கி தொடங்குகின்றது. இந்த நடைப்பயணம் ஏறக்குறைய 17 நாட்கள் தொடர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி புத்ராஜெயாவில் அமைந்திருக்கும் டத்தாரான் புத்ராவில் இருந்து தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்க்கல்வியின் எதிர்காலத்தையும் இருப்பையும் உறுதிப்படுத்தும் ஆலோசனை அடங்கிய மனுவையும் பிரதமரிடம் நேரடியாக தியாகு வழங்கவிருக்கிறார்.
அந்த மனுவில் 17 நாட்கள் அவர் மக்களுடன் அளவளாவிய கருத்துகளும் அடங்கும். பயணத்தின் போது பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார். நவம்பர் 25ஆம் தேதி ஜோகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளியில் காலை 9 மணி அளவில் சிறு விளக்கக்கூட்டத்துடன் நடைப்பயணம் தொடங்கும். அதிலும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென மே 19 இயக்கத்தினர் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த நடைப்பயணத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. குறிப்பாக நடைப்பயணத்திற்கான பாதுகாப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நடைப்பயணம் குறித்து அறிந்து கொள்ளவும் ஆதரவு வழங்கவும் தியாகு 016−6285288 கௌதம் 016−9489218 தமிழினியன் 012−4341474 என்பவர்களை தொடர்பு கொள்ளலாம்.

