மென்செஸ்டர், நவ.17 –
மென்செஸ்டர் யுனைடெட்டின் முன்னணி நட்சத்திரங்களான போல் பொக்பா, சிலாதான் இப்ராஹிமோவிச் மீண்டும் அந்த அணிக்கு திரும்பவிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சிலாதான் இப்ராஹிமோவிச், காயம் அடைந்த வேளையில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் போல் பொக்பா காயம் அடைந்தார். சிலாதான் காயம் அடைந்ததை அடுத்து பெல்ஜியமின் ரொமெலு லுக்காகூவை நிர்வாகி ஜோசே மொரின்ஹோ ஒப்பந்தம் செய்தார்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து இப்ராஹிமோவிச் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.எனினும் இப்ராஹிமோவிச் குறிப்பிட்ட காலத்தைக் காட்டிலும் வெகு விரைவாக குணமடைந்திருப்பதால் மொரின்ஹோ அவரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொண்டுள்ளார்.
போல் பொக்பா இல்லாத கடந்த இரண்டு மாதங்களில் மென்செஸ்டர் யுனைடெட் சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்த தவறியுள்ளது. பொக்பா இருந்தபோது இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டியுடன் சம அளவிலான புள்ளிகளைப் பெற்றிருந்த மென்செஸ்டர் யுனைடெட் தற்போது எட்டு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.
இந்நிலையில் இப்ராஹிமோவிச், பொக்பா ஆகிய இருவரும் சனிக்கிழமை நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டத்தில் ரிசர்வ் ஆட்டக்காரர்களாக இடம்பெறுவார்கள் என பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இருவரின் வருகை மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு மீண்டும் புத்துணர்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


