கோலாலம்பூர், நவ.17-
அண்மையில் நிகழ்ந்த சாலை விபத்தால் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் ஓய்வெடுத்துவரும் அவரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின் போது அன்வாரின் துணைவியுமான டத்தோஸ்ரீ வான் அசிஸா உடன் இருந்தார்.
இது குறித்து டூவிட்டரில் அன்வாரை தான் சந்தித்தது குறித்து படத்தை பதிவேற்றியுள்ள பிரதமர் நஜீப், அவர் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். நஜீப்பும் அன்வாரும் கலகலப்பாக இருக்கும் இந்த புகைப்படம் குறித்து வலைத்தளவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, அரசியல் வேறுபாடுகளை மறந்து அன்வாரை நஜீப் சந்தித்துள்ளது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், 14ஆம் பொதுதேர்தல் நெருங்கி விட்டதை இந்த சந்திப்பு உணர்த்துகின்றதா? எனவும் வலைத்தளவாசிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.


