கோலசிலாங்கூர், நவ.19-
இங்குள்ள ரிவர்சைட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் நிர்வாக துணைத்தலைமையாசிரியை ஆகியோர் மீதான அதிருப்தியின் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்நிலையில், இப்பள்ளி மாணவர்களை சீரழிக்கும் வகையில் நடந்துக்கொண்ட நிர்வாக துணைத்தலைமையாசிரியை மீது புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மநாதன் தெரிவித்தார்.
ஏற்கனவே, இப்பள்ளியில் நிர்வாகம் முறையில்லாமல் முடங்கி போய் உள்ளது. பள்ளி வளர்ச்சிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் தலைமையாசிரியையும் நிர்வாக துணைத்தலைமையாசிரியையும் தடையாக இருப்பது குறித்து மாவட்ட, மாநில கல்வி இலாக்காக்கள் வரை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் ஆக்ககரபூர்வமாக எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியின் நிர்வாக துணைத்தலைமையாசிரியை தான் படித்துக்கொடுக்கும் 5 ஆண்டு மாணவர்கள் அரையாண்டு தேர்வில் அறிவியல் பாடத்தில் சிறப்பான பதில்களை அளிக்காததால் அவரே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு சரியான பதிலை கொடுத்து எழுத சொல்லியிருக்கிறார். அதுவும், அரையாண்டு தேர்வுக்கு பின்னரான பள்ளி தவணை விடுமுறையில் பெற்றோர்களுக்கு முன்னறிவிப்பு இல்லாமல் சில மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து இந்த தவறை செய்ய வைத்திருக்கிறார் என பத்மநாதன் குற்றம் சாட்டினார்.
பள்ளி விடுமுறைகள் முடிந்து ஐந்தாம் ஆண்டு மாணவர்களை பள்ளியின் கணிணி அறைக்கு அழைத்து சென்ற அவர், மற்ற மாணவர்களுக்கும் சரியான பதிலை கொடுத்து தேர்வு தாளின் பதிலில் ஏமாற்று வேலையை செய்ய வைத்துள்ளார். அவர் தனது மாணவர்களுக்கு முறையாக படித்து கொடுத்திருந்தாலே மாணவர்களால் ஓரளவு சரியான பதிலை தேர்வில் வழங்கியிருக்க முடியும். மாணவர்களால் சரியான பதிலை வழங்க முடியவில்லை என்றால் அவர்களுக்கு அந்த நிர்வாக துணைத்தலைமையாசிரியையும் அறிவியல் ஆசிரியையுமான அவர் சரியாக போதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?
இதைவிட கொடுமை என்னவென்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக பள்ளித்தலைமையாசிரியையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான். நாங்கள் அளித்த புகார் மனு குறித்து அண்மையில் கேள்வியெழுப்பிய போது அந்த தலைமையாசிரியை எப்போது கொடுத்தீர்கள் என கேள்வியெழுப்புகிறார். பிறகு, பள்ளியின் அலுவலகத்தில் நாங்கள் புகார் மனுவை அளித்ததற்கான ஆதாரத்தை காட்டிய போது அவர் எங்களின் புகார் மனுவை நகல் எடுப்பதற்காக கேட்கிறார். ஆக மொத்தம் அவர் எங்களது புகார் மனுவை தொலைத்து விட்டார் என்பது உறுதியாகின்றது.
எதுவாக இருப்பினும், தனது கிரேட்டை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த நிர்வாக துணைத்தலைமையாசிரியை இந்த ஏமாற்று வேலையை செய்துள்ளார் என்பது தெரிகிறது. அவருக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் வேறு நிலைக்கு உயரலாம். ஆனால், இங்கு மாணவர்களின் கல்வியும் எதிர்காலமும் கேள்வி குறியாகின்றதே? இதுப்போன்று இப்பள்ளியில் பல ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருகின்றன. புகார்களுக்கு மேல் புகார் அளித்து நாங்கள் சோர்ந்து விட்டோம்.
புத்ராஜெயாவில் மாபெரும் போராட்டம்!
விரைவில் புத்ரா ஜெயாவிலுள்ள கல்வி அமைச்சின் முன்னிலும் பிரதமர் அலுவலகத்தின் முன்பிலும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. கோலசிலாங்கூர் மாவட்டம் மற்றும் மாநில கல்வி இலாகாக்கள் மீது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். எங்கள் பிள்ளைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களும் சமூக அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும். குறிப்பிட்ட சிலரை தற்காப்பதற்காக இப்பள்ளியில் நடக்கும் அநியாயங்களையும் ஏமாற்று நடவடிக்கைகளையும் அதிகாரத்தில் உள்ள முக்கிய தரப்பினர்கள் அறிந்தும் அறியாதது போல இருப்பதாக பத்மநாதன் கூறினார்.




