காஜாங், நவ.20-
காஜாங் தமிழ்ப்பள்ளியின் 41ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு படிநிலை ஒன்று, படிநிலை இரண்டு என இரு பிரிவாக இரு நாள்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
குறுகிய காலத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்துத் தயார் செய்தனர். முதல் நாளில், கே பிந்தார் தலைமைச் செயல்முறை அதிகாரி ரெ.தியாகராஜனும் மறுநாளில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுதாநந்தனும் திறப்புரையும் ஆற்றிப் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர். பள்ளி மேலாளர் வாரியக்குழுவின் தலைவர் டாக்டர் ரெ.சந்திரகேசு நிறைவுரையாற்றினார். நன்கொடையாளர் ரெ.சுப்ரமணியம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
இருநாள்களிலும் தலைமையுரையாற்றிய தலைமையாசிரியர் ஜோன் போஸ்கோ, விளையாட்டுப் போட்டியின் வெற்றிக்குத் துணைநின்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், நன்கொடையாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் தம் நன்றியைப் பதிவு செய்தார். பள்ளியின் வளர்ச்சிக்குத் துணைநிற்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
இரு நாள்களிலும் நடைபெற்ற மாணவர்களின் இசை நடனம், இசை உடல் பயிற்சி, அணிவகுப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்தன. இம்முறை நீலம், மஞ்சள், பச்சை ஆகிய குழுக்கள் அதிக புள்ளிகள் பெற்று வாகை சூடின.