லண்டன், நவ.21 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான வெஸ்ட் புரோம்விச் அல்பியோன், டோனி புலிசை நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. பிரீமியர் லீக் போட்டியில் கடந்த 21 ஆட்டங்களில், வெஸ்ட் புரோம்விச் அல்பியோன் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததை அடுத்து டோனி புலிஸ் நிர்வாகி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்த பருவத்தில் வெஸ்ட் புரோம்விச் பங்கேற்ற 11 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவுச் செய்யவில்லை. வெஸ்ட் புரோம்விச் கிளப்பின் துணை பயிற்றுனர் கேரி மெக்சன் தற்காலிகமாக முதன்மை அணியை வழி நடத்துவார் என அந்த கிளப்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிளப்பின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெஸ்ட் புரோம்விச் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் டோனி புலிஸ், வெஸ்ட் புரோம்விச் நிர்வாகியாக பொறுப்பேற்றார். தகுதி இறக்கம் காணும் நிலையில் இருந்த அந்த கிளப்பை 13 ஆவது இடத்துக்குக் கொண்டுச் சென்றார்.2015/16 ஆம் பருவத்தில் 14 ஆவது இடத்தைப் பிடித்த வெஸ்ட் புரோம்விச் கடந்த பருவத்தில் 10 ஆவது இடத்தைப் பெற்றது.
வட அயர்லாந்து கால்பந்து அணியின் பயிற்றுனர் மைக்கல் ஓநேல், கிறிஸ்டல் பேலசின் முன்னாள் பயிற்றுனர் அலன் பர்டியூ, வெஸ்ட் ஹேம் யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகி சாம் அல்லர்டாய்ஸ் ஆகியோரின் பெயர், வெஸ்ட் புரோம்விச் நிர்வாகி பொறுப்புடன் இணைத்துப் பேசப்படுகிறது.


