செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > செடிக் ம.இ.கா.வின் அதிகாரத்தின் கீழ் இல்லை! பேராசிரியர் முனைவர் ராஜேந்திரனிடம் கேளுங்கள்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

செடிக் ம.இ.கா.வின் அதிகாரத்தின் கீழ் இல்லை! பேராசிரியர் முனைவர் ராஜேந்திரனிடம் கேளுங்கள்!

கோலாலம்பூர், நவ.22-

இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நிதிகள் குறித்து பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார், பிரதமர்துறையிடம் குறிப்பாக இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவின் (செடிக்) தலைமை இயக்குநரான பேராசிரியர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரனிடம் கேட்க வேண்டுமே தவிர ம.இ.கா.விடம் அல்ல என அக்கட்சியின் தேசிய தகவல் பிரிவின் செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் வழங்கப்பட்ட 23 கோடி வெள்ளி நிதி குறித்து ராஜேந்திரனிடம்தான் கேள்வியெழுப்ப வேண்டும். செடிக்கில் ஒதுக்கப்படும் நிதிகளில் ம.இ.கா.விற்கு அதிகாரம் இல்லை என்பதை சிவகுமார் உள்பட எதிர்கட்சி தலைவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாண்டு செடிக் மறுசீரமைப்பு செய்யப்பட்டது வரையில் முழு அதிகாரம் ராஜேந்திரனுக்குத்தான் உள்ளது.

மேலும், பிரதமர்துறை துணையமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி அண்மையில்தான் செடிக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் நாடாளுமன்றத்தில் செடிக் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் வழங்க மாட்டார். ஆகையால், செடிக்கின் நிதி ஒதுக்கீடு குறித்து பேராசிரியர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் முன்வந்து பதிலளிக்க வேண்டுமென தாம் கேட்டுக்கொள்வதாக சுப்ரமணியம் கூறினார்.

மேலும், செடிக்கின் பெரும்பாலான நிதிகள் ம.இ.கா.விற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. ம.இ.கா.வின் உறுப்பினர்கள் வழங்கிய மனுக்களை செடிக் காரணங்கள் இன்றி நிராகரித்ததற்கான ஆதாரங்களை என்னால் காட்ட முடியும்.

ஆகையால், செடிக்கின் நிதிகள் குறித்து ராஜேந்திரனுக்குத்தான் தெரியும். அவர்தான் அது குறித்த அறிக்கைகளை பிரதமர்துறைக்கு அனுப்புவார். செடிக்கின் நடவடிக்கைகளை கண்காணிக்க இவ்வாண்டு மே மாதத்தில் ம.இ.கா.வின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இந்திய சமூக விவகாரங்களுக்கான அமைச்சரவை சிறப்பு குழுவின் நிர்வாக செயற்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதனால், 23 கோடி வெள்ளி நிதி குறித்து ம.இ.கா.விற்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும், சிவகுமார் ம.இ.காவையே குற்றம் சாட்டுவதற்கு பதிலாக வேறுவழிகளில் இந்தியர்களின் வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டுமென சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன