Homeமலேசியாபெட்ரோல் நிலைய கொலை வழக்கு - இரண்டு சந்தேகநபர்கள் கைது!

பெட்ரோல் நிலைய கொலை வழக்கு – இரண்டு சந்தேகநபர்கள் கைது!

ஜோகூர் பாரு, டிச.21 –

ஜோகூர் பாரு, தாமான் பெலாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூரமான கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பெண் என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் காலில் காடிர் தெரிவித்துள்ளார்.

19 மற்றும் 22 வயதுடைய அந்த இரண்டு சந்தேகநபர்களும் புதன்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் சொன்னார். அரச மலேசிய போலீஸ் படையின் சிறப்பு விசாரணைக் குழு அந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில்,தாமான் பெலாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், தனது காரின் டயர்களில் காற்று நிரப்பிக் கொண்டிருக்கையில், 44 வயது ஆடவர் நான்கு நபர்களால் தாக்கப்பட்டார். அவரை வலுக்கட்டாயமாக காரினுள் இழுத்துச் செல்ல அந்த நால்வரும் முயற்சித்தனர். அவர்களிடமிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார்.

அதன் பின்னர், அந்தக் கொலையாளிகள் அவரின் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தினர். மேலும் அவர்கள் வந்த பி.எம்.டபள்யூ காரைக் கொண்டு, குத்துப்பட்ட அந்த ஆடவரை அவர்கள் இருமுறை மோதித் தள்ளி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவம் நிகழ்ந்த அந்த இடத்திலேயே அந்த ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அதனை தனது கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்தார்.

spot_img

latest articles

explore more