spot_img
14.6 C
London
spot_img
Home மலேசியா கல்வி டி.எல்.பியை எதிர்க்கும் இயக்கங்களை ஒன்றிணைக்கும் பாத்தேரா அமைப்பு!

டி.எல்.பியை எதிர்க்கும் இயக்கங்களை ஒன்றிணைக்கும் பாத்தேரா அமைப்பு!

0
323

கோலாலம்பூர், பிப்.12-

இருமொழி பாடத்திட்டத்தை (டி.எல்.பி) கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியதிலிருந்து பல்வேறு அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, கல்வியமைச்சும் மத்திய அரசாங்கமும் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

தனித்தனியாக பல்வேறு அமைப்புகள் டி.எல்.பி. பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது அந்த அமைப்புகளை ஒன்றிணைக்கும் வகையில் பாத்தேரா எனும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு தலைவர்களாக டத்தோ ஜைனால் அபிடின் போர்ஹான், ஸ்டான்லி யோங் யேவ் வேய், எம்.தமிழ்செல்வன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ள நிலையில் செயலாளராக ஹாஸ்னி அப்பாஸ், ஆலோசகராக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த அமைப்பு தொடர்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு தலைநகரிலுள்ள சீன அசெம்பளி மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்ட டத்தோ ஜைனால் அபிடின் போர்ஹான், ஸ்டான்லி யோங் யேவ் வேய், எம்.தமிழ்செல்வன் ஆகியோர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தேசிய மொழிக்கு முக்கியத்துவம் அளித்தல், தாய்மொழியை கௌரவித்தல், ஆங்கில மொழியிலும் இதர அனைத்துலக மொழியிலும் புலமைப் பெறுதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த அமைப்பு போராடும் என அவர்கள் அனைவரும் தெரிவித்தனர். மாணவர்களின் பண்பு நலன்களை உருவாக்குவதிலும் அவர்கள் விவேகமாக இருப்பதிலும் மொழி முக்கிய பங்கை வகிக்கின்றது. அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக மொழி ஆளுமை விளங்குகின்றது.

மாணவர்கள் தங்களது அடையாளத்தையும் பின்புலத்தையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இந்த அடையாளங்களை அறிந்திருக்கவில்லை என்றால் மலேசிய சமூகத்திலும் நமது தாய்மொழியிலும் இருக்கின்ற பெருமையையும் தனித்துவத்தையும் நாம் இழந்து விடுவோம்.

பள்ளி காலத்தில் மாணவர்களை அறிவாளிகளாக்குவதிலும் அவர்களை சுறுசுறுப்பானவர்களாக உருவாக்குவதிலும் தேசிய மொழியும் தாய் மொழியும் பயன்படுத்தப்பட வேண்டும். டி.எல்.பி பாடத்திட்டமானது முன்பு இருந்த அறிவியல் மற்றும் கணிதத்தை ஆங்கிலத்தில் போதிக்கும் கற்றல் மற்றும் கற்பித்தலின் மறுவடிவம் என்றும் அந்த திட்டம் அதன் இலக்கையும் உண்மையான நோக்கத்தையும் அடைய முடியாது என அவர்கள் கூறினர்.

மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அமைப்பின் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிறகு, இந்த அமைப்பு டி.எல்.பி. பாடத்திட்டத்திற்கு எதிராக முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்றும் இதில் சுமார் 17 இயக்கங்கள் இணைந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.